Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

கரோனா தொற்று 2-வது அலையில் சித்த மருத்துவத்தில் 21,285 பேர் குணமடைந்தனர்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கரோனா தொற்று 2-வது அலையில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் 21,285 பேர் குணமடைந்தனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்துக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 54 சித்தா கரோனா சிகிச்சை மையங்கள், 11 யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள், 2 ஆயுர்வேதா சிகிச்சைமையங்கள், ஒரு யுனானி சிகிச்சைமையம், ஒரு ஓமியோபதி சிகிச்சைமையம் என மொத்தம் 69 இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு 6,541 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 21,285 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோயின் தன்மை அறிந்து கொள்வதற்கு பயன்படும்.இந்த மையத்தை தொடர்பு கொள்ள7358723063 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது கரோனா என்றும், அவர் உயிரிழந்த போதுகரோனா இல்லை என்றும் பரிசோதனை முடிவு வந்தது. அதேபோன்று தான் வசந்தகுமார் எம்.பி, மருத்துவமனையில் அனுமதிக்கும் போதும்பரிசோதனை முடிவுகள் வந்தது. அப்போது அமைச்சராக இருந்தவர்கள் ஏன் அவர்களுக்கு தொற்றுபாதித்ததற்கான சான்றிதழ் வழங்கவில்லை.

கரோனா தொற்றால் உயிரிழந்தஅனைவருக்கும் நிவாரண நிதி கொடுக்கப் போகிறார்கள், அதனால்தான் தொற்று பாதிப்பு இல்லை என சான்றிதழ் தருவதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். அது தவறு. கரோனாதொற்றால் தாய், தந்தையைஇழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு தான் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளி மருத்துவர்களை கரோனாவுக்கு சிகிச்சைஅளிக்க கட்டாயப்படுத்துவது இல்லை. அப்படி எங்கேயாவது தவறுகள் நடப்பதாக கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவத்தை ஊக்கப்படுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x