Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

புனே சீரம் நிறுவனத்தில் இருந்து 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: விமானம் மூலம் சென்னை வந்தன

புனேவில் இருந்து 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன. இவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசு தாமாகவும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது.கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமானதால் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் தினமும் சராசரியாக 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. போதிய அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 10 நாட்களாக குறைவானவர்களுக்கே தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று முன்தினம் 2,327 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பல மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்றுமுன்தினம் சென்னை வந்தன. உடனடியாக அவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. ஆனால், நேற்று மதியத்துக்குள் இந்த தடுப்பூசிகளும் தீர்ந்துவிட்டன.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் இருந்து 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்தன. அவற்றை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்குசுகாதாரத் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் வருவதால், தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அதிகபட்சமாக 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x