

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பயன்பெற ஏதுவாக, 10 சதவீத ஆக்சிஜன் படுக்கை, ஐசியு படுக்கைகளை அரசு அங்கீகரித்துள்ள தனியார்மருத்துவமனைகள் பிரத்தியேகமாக ஒதுக்க வேண்டும் எனபுதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே 22-ம் தேதி விரிவான அரசாணையை வெளியிட்டது. அதில், “முதல்வரின் அறிவிப்பின்படி அதிதீவிர மற்றும் அதிதீவிரமில்லாத அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
தேவையான மருந்துகள் மற்றும் அனைத்து பரிசோதனைகளுக்குமான கூடுதல் கட்டணம், பயனாளிகள் சார்பில் மருத்துவ காப்பீடு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டது. இதில், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் எத்தனை சதவீத படுக்கைகளை, எந்தவகை சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
தற்போதைய சூழலில், ஆக்சிஜன் படுக்கை தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதற்கேற்ப, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட சதவீத ஆக்சிஜன் படுக்கை, தீவிரசிகிச்சை படுக்கைகளை பிரத்தியேகமாக ஒதுக்கி புதிய அரசாணை வெளியிட்டால், ஏழை நோயாளிகள் பயன்பெறுவர் என்பதை வலியுறுத்தி ‘இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 4-ம் தேதி விரிவான செய்தி வெளியானது.
அதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் படுக்கைகளை ஒதுக்கும் அரசாணையில் தேவையான திருத்தம் மேற்கொள்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என உறுதி அளித்திருந்தார்.
புதிய அரசாணை வெளியீடு
இந்நிலையில், முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசு உத்தரவுப்படி, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 50 சதவீத படுக்கைகளில், 10 சதவீதத்தை (ஆக்சிஜன்படுக்கை, ஐசியு படுக்கை வசதி)முதல்வரின் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு என பிரத்தியேகமாக ஒதுக்க வேண்டும்.
அப்போதுதான், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எந்தவித தாமதமும், சிரமமும் இல்லாமல் பயனாளிகள் கரோனா சிகிச்சை பெற முடியும் என தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அரசிடம் தெரிவித்திருந்தார்.
அவரின் அந்த கருத்துருவை பரிசீலனை செய்து, அதை ஏற்று, 10 சதவீத படுக்கைகளை (ஆக்சிஜன் படுக்கை, ஐசியு படுக்கை வசதி) அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு என பிரத்தியேகமாக ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்க தனிக் குழு
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘செல்லும் இடங்களில் எல்லாம் தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறேன். பயனாளிகளின் செல்போன் எண்ணை கேட்டு, நேரடியாக தொடர்புகொண்டு சிகிச்சை குறித்து கருத்து கேட்கிறேன். ஒரு தனியார் மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட பயனாளியிடம் ரூ.40 ஆயிரம் கூடுதலாக பெற்றதை அறிந்து, உடனடியாக அதை திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டது.
கூடுதல் கட்டண புகாரையடுத்து 40 மருத்துவமனைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தனியார் மருத்துவமனைகளில் இடஒதுக்கீட்டின்படி நோயாளிகள் அனுமதிப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும்” என்றார்.