மகளிர் காவலர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் விநியோகம்

கோவை மாவட்டக் காவல்துறையின் சார்பில், துரித விசாரணைப் பணிகளுக்காக, மகளிர் காவலர்களுக்கு வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்.     படம்: ஜெ.மனோகரன்
கோவை மாவட்டக் காவல்துறையின் சார்பில், துரித விசாரணைப் பணிகளுக்காக, மகளிர் காவலர்களுக்கு வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம். படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

விசாரணைப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வசதியாக மகளிர் காவலர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இருசக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகளை வழங்கினார்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாவட்ட காவல் துறைக்கு18 இரு சக்கர வாகனங்கள், 18 மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் துடியலூர், பேரூர், பொள்ளாச்சி ஆகிய 3 மகளிர் காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு 3 இருசக்கர வாகனங்கள், வழக்கு பதிவு பணிக்கு 3 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

அதேபோல, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், வடவள்ளி, பேரூர், மதுக்கரை, சூலூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி மேற்கு, கோமங்கலம், ஆனைமலை ஆகிய 15 காவல் நிலையங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கும் மகளிர் காவலர்களுக்கு 15 இரு சக்கர வாகனங்கள், 15 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

‘100’ என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை அழைத்ததும், மகளிர் காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் மடிக்கணினியுடன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து, உயரதிகாரிகளுக்கு தெரிவித்து, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நேரில் வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாத அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in