

மழைவெள்ளத்தின்போது மியாட் மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
சென்னை மணப்பாக்கத்தில் அடை யாறு ஆற்றின் அருகில் 10 மாடிகளுடன் மியாட் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக் கான அனுமதியை வழங்கும்போது அதற்கான விதிமுறைகளை சென் னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) பின்பற்றவில்லை. பொதுவாக ஆற்றின் கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு எந்தக் கட்டிடமும் கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. ஆனால், இம்மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீர்வழி பாதையை ஆக்கிரமித்து மருத்துவமனையின் வாகன நிறுத்தத்தை கட்டியுள்ளனர். இது, சிஎம்டிஏ, பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி ஆகிய வற்றுக்கும் தெரியும். இருப்பினும், இதுவரை இந்த ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த 1-ம் தேதி கனமழை கொட்டியதால் அடையாறில் இது வரை இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது மியாட் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து மழைநீர் உள்ளே புகுந்தது. இதையடுத்து மின்சாதனங்களும், ஜெனரேட்டர்களும் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. அதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துடன் கைகோர்த்துக் கொண்டு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. கட்டிட கட்டுமானத்தின் போது விதிமீறல், அடையாறு மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட இம்மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு மனுகொடுத்தேன். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேற்கண்ட சம்பவத்தில் 18 பேர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், 75-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்பதால், மருத்துவக் கல்வி இயக்குநர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையர், நந்தம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். அடையாறை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மருத்துவமனையின் வாகன நிறுத்தத்தை உடனடியாக இடிக்கவும், மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனைத்து அனுமதி களையும் ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. மனுவுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.