Last Updated : 12 Jun, 2021 07:01 AM

 

Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இடிந்துவிழும் மேற்கூரைகள்; புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டுவதில் இழுபறி: குடியிருப்போர் நலச் சங்கத்தினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை

பழுதடைந்த சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் இழுபறி நீடிப்பதால், குடியிருப்போர் நலச் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், கடந்த 1984-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 11 ஏக்கரில், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 21 பிளாக்குகளில் 960 வீடுகள் கட்டப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் குறைந்த வருவாய் உள்ளவர்களும், 350 வீடுகளில் நடுத்தர வருவாய் உள்ளவர்களும், 48 வீடுகளில் அதிக வருவாய்உள்ளவர்களும் வசிக்கின்றனர்.

பொதுமக்கள் தவணைத் தொகை செலுத்தி வீடுகளை வாங்கி, அதன் உரிமையாளர்களாகியுள்ளனர். குடியிருப்புகள் கட்டப்பட்டு 36 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளதாலும், முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததாலும், பெரும்பாலான வீடுகள் பழுதடைந்து காணப்படுகின்றன. சுற்றுச்சுவர்கள், மேற்கூரைகள் பெயர்ந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்தும் காணப்படுகின்றன. இங்குள்ள பி-விங்க் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. டி-விங்க் முதல் தளத்தில் உள்ள கூரையும் சேதமடைந்துள்ளது.

இதுதொடர்பாக, குடியிருப்போர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘இங்குள்ள அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளைக் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். வீட்டுவசதி வாரியத்தினர் 3.33 ஏக்கரில் மட்டும்960 வீடுகளை கட்டித் தருவதாக கூறி,உத்தேச வரைபடம் தயாரித்து ஒப்புதலுக்காக எங்களுக்கு அனுப்பினர். நாங்கள் அதை ஒப்புக்கொள்ள வில்லை. அதே அளவில் எங்களுக்கு வீடுகளை கட்டித் தர வேண்டும். 7 தளங்கள் கட்டினால் பரவாயில்லை. மொத்தமுள்ள 960 வீடுகளில், 750 வீடுகளுக்கு உரிமையாளர்கள் பத்திரம் வாங்கியுள்ளனர்.

மீதமுள்ள 210 வீடுகளில் 100 பேர் முழு தொகையை செலுத்திவிட்டனர். ஆனால், பத்திரம் பெறவில்லை. குடியிருப்புவாசிகளும், வீட்டுவசதி வாரியத்தினரும் இணைந்த கூட்டுத் திட்டம் என்பதால் நாங்கள் தன்னிச்சையாக வீடு கட்ட முடியாது. வீட்டுவசதி வாரியத்தினர் மேற்கண்ட 210 குடியிருப்புகளுக்கு தடையில்லா சான்று வழங்கினால், நாங்கள் தனியார்கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டிக் கொள்கிறோம். அல்லது வீடுகளை வாரியமே கட்டித் தர வேண்டும்’’ என்றனர்.

மாவட்ட வருவாய் துறையினர் கூறும்போது, ‘‘இந்த இடத்தை ஆய்வு செய்து,பேரிடர் மேலாண்மை விதிகளின்படி, ‘மனிதர்கள் வாழ தகுதியற்ற கட்டிடம்’ என கடந்த 2017-ம்ஆண்டு குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதைத் தொடர்ந்து, 300 பேர் வீடுகளை காலி செய்து சென்றுவிட்டனர்’’ என்றனர்.

வீட்டுவசதி வாரியத்தின் கோவைப் பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ இங்கு பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு, 3.33 ஏக்கரில் கூடுதல் தளங்களுடன் 960 வீடுகள் கட்டித் தர முடிவு செய்து, வரைபடம் தயாரித்து குடியிருப்பு சங்கத்தினரிடம் அளித்துள்ளோம்.

சங்கத்தினர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர், தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் கட்டிக் கொள்வதாகவும், தடையில்லா சான்று வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x