

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கடந்த சில தினங்களாக கோவையில் முகாமிட்டு, கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், புலியகுளம், சிங்காநல்லூர், ரத்தினபுரி, கவுண் டம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், திமுக சார்பில் பொதுமக்களுக்கு காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புலியகுளத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ மதுரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளுக்கு காலதாமதம் ஆவது குறித்து அப்போதைய மாநில அரசும், மத்திய அரசும் மாறி மாறி பொய் மட்டுமே கூறி வந்துள்ளனர். வெகுவிரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முழு முயற்சிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்’’ என்றார்.
ஆக்சிஜன் உற்பத்தி மையம்
வால்பாறை அரசு மருத்துவமனை யில் ரூ.33 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை உதயநிதி ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன், பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெகமத்தில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கரோனா பேரிடர் கால நிவாரணப் பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.