டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சென்னையில் போதை மாத்திரை விற்பனையா?- தனிப்படை போலீஸார் விசாரணை

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சென்னையில் போதை மாத்திரை விற்பனையா?- தனிப்படை போலீஸார் விசாரணை
Updated on
1 min read

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிலர் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி, சிங்காச்சாரி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் போதை மாத்திரை போடும் பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் ஐஸ்அவுஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முத்தையா தோட்டம், மாதா கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்துள்ளனர்.

கொடுக்க மறுத்த கார்த்திக்கை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். காயம் அடைந்த கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர், அவர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக ராயப்பேட்டை சுரேஷ், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், அருண் (20) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிலர் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இதுபோன்ற கும்பலை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை அமைத்து போலீஸார் சென்னை முழுவதும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in