Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசு நிலங்களில் இருந்து செங்கல் காளவாய்களுக்காக வெட்டப்படும் பனை மரங்கள்: உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி பகுதியில் செங்கல் காளவாய்களுக்காக, அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள பனை மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்படுவது அதிகரித் துள்ளதால், இதைத் தடுத்து பனை மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி பகுதிகளில் செங்கல் காளவாய்களில் எரியூட்டு வதற்காக, அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள பனை மரங்களை சிலர் வெட்டி, விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வகையில் சேகல், மடப்புரம், கொருக்கை, ஆதிரங்கம் கட்டிமேடு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக ஏராளமான பனை மரங்கள் வெட்டப் பட்டுள்ளன.

இதுகுறித்து அவ்வப்போது சமூக ஆர்வலர்கள் காவல் நிலையங்களிலும், வருவாய்த் துறையிலும் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், பொது இடங் களில் உள்ள பனை மரங்கள் வெட்டப்படுவது தொடர்ந்து வருகிறது. இதேபோல, தனியார் நிலங் களில் உள்ள பனை மரங்களையும் சிலர் சுயலாபத்துக்காக வெட்டி விற்பதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பொது இடங்களில் உள்ள பனை மரங்களை வெட்டி விற்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பனை மரங்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பருத்திச்சேரி ராஜா கூறியது:

இப்பகுதியில் தனியார் நிலங்களில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு சிலர் அனுமதி பெற்றுக் கொண்டு, அவற்றுடன் சேர்த்து அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள பனைமரங்களையும் வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதனால், லாரிகளில் பனை மரத் துண்டுகளை ஏற்றிச் செல்லும்போது, போலீஸாரால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவ்வாறு அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து வெட்டப்பட்ட பனை மரத் துண்டுகளை ஏற்றிச் சென்ற லாரியைப் பிடித்து, வலி வலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.

அதேபோல, பொது இடங் களில் உள்ள பனை மரங்கள் வெட்டப்படுவது குறித்து போலீஸில் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.இதை பயன்படுத்திக்கொண்டு, பொதுஇடங்களில் உள்ள பனை மரங்களை வெட்டி செங்கல் காளவாய்களுக்கு பயன்படுத்த எடுத்துச்செல்வது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு உரிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கி, பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக, திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசன் கூறியது: பனை மரங்கள் வெட்டப்படுவது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், ஓரிரு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் எங் களின் கவனத்துக்கு வராமல் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x