Last Updated : 11 Jun, 2021 08:44 PM

 

Published : 11 Jun 2021 08:44 PM
Last Updated : 11 Jun 2021 08:44 PM

கரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும்: சுகாதாரத்துறைச் செயலர் அருண் தகவல்

புதுச்சேரி

கரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும் எனப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 11) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கரோனா ஒருநாள் பாதிப்பு 2000ஆக இருந்தது. தற்போது கரோனா ஒரு நாள் பாதிப்பு 500க்கும் கீழ் வந்து கொண்டுள்ளது. இது நல்ல விஷயம்தான்.

ஆனால், முற்றிலும் கரோனா நம்மை விட்டுப் போகவில்லை. ஆகவே, முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், முக்கியமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டும்தான் கரோனா 3-வது அலையை நம்மால் தடுக்க முடியும்.

சமீபத்தில் நமது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில், 97 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்தான் வென்டிலேட்டர் மற்றும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டவர்கள். ஆகவே, தடுப்பூசியால் மட்டும்தான் கரோனா பாதிப்பைத் தடுக்க முடியும். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 16 முதல் 19-ம் தேதி தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளது. இது ஆளுநருடனான ஆலோசனைக் கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். 100 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக அனைத்துத் துறைகளுடனும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித்துறைச் செயலர் வல்லவன் கூறும்போது, ‘‘கரோனா தடுப்பூசி திருவிழாவை 100 இடங்களில் நடத்த 9 மூத்த பிசிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி போடாத நபரை அடையாளம் கண்டு, அவர்களைத் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்து வந்து, தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார.

துணை ஆட்சியர் (தெற்கு) கிரிசங்கர் கூறுகையில், ‘‘தடுப்பூசி திருவிழாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் 10 கிராமங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தியுள்ளோம். இந்த கிராமங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 முதல் 90 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பயப்படத் தேவையில்லை. சில கிராமங்களில் 80 வயதுடைய சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கும் எந்தவிதமான ஒவ்வாமையும் இல்லை. தடுப்பூசி போடப்பட்டவர்கள் கரோனா தீவிரத்தில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர். எனவே அனைவரும் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x