புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டம். |  படம்: எம். சாம்ராஜ்.
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டம். | படம்: எம். சாம்ராஜ்.

புதுச்சேரி அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் பாஜக பணி முடிந்துவிட்டது; முதல்வர் விரைவில் அறிவிப்பார்: சாமிநாதன் பேட்டி

Published on

புதுச்சேரி அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் பாஜகவின் பணி முடிந்துவிட்டது. இனி முதல்வர் ரங்கசாமி விரைவில் அறிவிப்பார் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தேர்தலையொட்டி ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் ரங்கசாமி கோப்பு அனுப்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மே 2-ல் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வென்றது. மாநில முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7-ல் பதவியேற்றார். தேர்தலில் வென்று 40 நாட்களாகியும், முதல்வராகப் பொறுப்பேற்று ஒரு மாதத்தைக் கடந்தும் அமைச்சர்கள் பதவியேற்பில் கடும் காலதாமதம் முதல் முறையாகப் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நமச்சிவாயம் உட்பட மக்களால் தேர்வான ஆறு எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்களில் ஒருவருக்கு கரோனா என்பதால் மீதமுள்ள இருவரும், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் மூவரில் இருவரும் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் பல விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், "உலக யோகா தினத்தையொட்டி இரண்டு நாள் யோகா முகாம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் புதுச்சேரி மாநிலத்தில் நூறு சதவீதம் தடுப்பூசி போடப்படும். இதற்காக முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி 300 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் அமைச்சரவை அமையப்போவது எப்போது என்று கேட்டதற்கு, "அமைச்சரவை அமைக்கும் விஷயத்தில் பாஜகவின் பணி முடிந்துவிட்டது. பாஜக தேசியக் கட்சி என்பதால் மாநிலக் கட்சி போல் முடிவு எடுக்க முடியாது. இனி முதல்வர் ரங்கசாமிதான் அமைச்சரவை அமைக்கும் முடிவை அறிவிப்பார். பதவியேற்றவுடன் முதல்வர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால்தான் தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது. கூட்டணியில் பிரச்சினை, குழப்பம் ஏதுமில்லை. முதல்வர் விரைவில் அமைச்சர்களை அறிவித்து, பதவியேற்பார்கள். பாஜக எம்எல்ஏ விரைவில் சபாநாயகராவார்" என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் மாளிகைக்குக் கோப்பு

சபாநாயகர், அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என்று என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "அமைச்சரவை தொடர்பாக வரும் 14-ல் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிடுவார். பாஜக மேலிடம் முதல்வரிடம் பேசியதன் அடிப்படையில் வரும் 16-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடத்த அனுமதிக்கக் கோரி ஆளுநர் மாளிகைக்குக் கோப்பை அனுப்பியுள்ளார்" என்று குறிப்பிடுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in