Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM

படித்தவர்கள், அந்தஸ்தில் இருப்பவர்கள் இந்தியாவில் ஓட்டு போடுவது குறைவு: இந்து மையத்தில் கருத்துக்கணிப்பு நிபுணர் பேச்சு

நம் நாட்டில் நிறைய படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் ஓட்டு போடுவது குறைவு என்று கருத்துக்கணிப்பு வல்லுநர் ராஜீவ் எல்.கரண்டிகர் கூறினார்.

'கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி ‘தி இந்து’ அரசியல் மற்றும் பொதுக் கொள்கை மையத்தில் வியாழக்கிழமை நடந்தது. தேர்தல் கருத்துக்கணிப்பு வல்லுநரும் சென்னை கணிதவியல் நிறுவன இயக்குநருமான ராஜீவ் எல்.கரண்டிகர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

கணிப்பு பொய்யாகலாம்

கருத்துக்கணிப்பில் முக்கிய மானது மாதிரி கருத்துக் கணக் கெடுப்பு (சாம்பிள் சர்வே). இந்தியாவில் 81 கோடி வாக்காளர்கள் இருந்தாலும், சுமார் 50 கோடி பேர்தான் ஓட்டு போடுகின்றனர். ஆனால், 20 ஆயிரம் பேரிடம் மட்டுமே பேசி, அதை வைத்து ஒட்டுமொத்த நாட்டின் தேர்தல் முடிவை கணித்தாகவேண்டும்.

கருத்துக்கணிப்பு முடிவு உண்மையாகவே இருந்தாலும் எதிர் தரப்பினர் ஏற்கமாட்டார் கள். இது அரசியலில் சாதாரணம். உண்மையிலேயே கருத்துக் கணிப்பு முடிவுகள் துல்லியமாக அமைந்துவிடாது. எங்களது கணிப்புக்கு மாறாக அமைவதற்கான சாத்தியக்கூறும் அதிகம்.

100 துண்டுச் சீட்டுகளில் 99 சீட்டுகளில் ‘7’ என்றும், ஒரே ஒரு சீட்டில் ‘8’ என்றும் எழுதிப் போட்டு குலுக்கினால் எந்த சீட்டு வரும்? ‘7’ வரும் என்றே 99% பேர் கூறுவார்கள்.

இது சாதாரண கணக்கு. இதைக் கண்டுபிடிக்க பெரிய படிப்பு தேவையில்லை. ஆனால், பட்டறிவு (காமன் சென்ஸ்) முக்கியம். அதேபோல, கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு கணிதம் தெரிந்திருப்பதோடு, ஓரளவு பட்டறிவும் வேண்டும். இதில் வேறெந்த புள்ளியல் விவரங் களோ, நிகழ்தகவியல் (Probability) தேற்றங்களோ இல்லை.

ஒரு தொகுதியில் கருத்துக் கணிப்பு என்று வரும்போது, 2 முக்கிய வேட்பாளர்கள் இடையே வித்தியாசம் வெறும் 5 சதவீதம் என்று வைத்துக்கொண்டால், அதில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக பல ஆயிரம் சாத்தியக் கூறுகள், நிகழ்வுகள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்வோம். அதை பலமுறை ஆராய்ந்து, ஒன்றை இறுதி செய்வோம். அது 99% உண்மையாக இருக்கும்.

சந்திக்கும் சவால்கள்

இந்தியாவைப் பொருத்தவரை சமூக பொருளாதார ஏணியில் மேலே செல்லச் செல்ல, வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். மெத்தப் படித்தவர்கள், நல்ல நிலையில் இருப்பவர்கள் ஓட்டு போடுவது குறைவு. இதுபோன்ற நேரங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவும் காங்கிரஸுக்கு அதிக வாய்ப்பும் இருக்கவேண்டும். ஆனால், இதுகூட இப்படியே நீடிப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கிறது. இதை சரியாகக் கணிப்பது சவாலானது. உண்மையான தகவல்களை சேகரித்துத் தரக் கூடிய நபர்கள் கிடைப்பதும் சவாலாக உள்ளது. ஒரு நபரை பார்க்காமல் இவர்களே நிரப்பிக் கொடுத்துவிடும் வாய்ப்பும் உண்டு. இவ்வாறு கரண்டிகர் பேசினார்.

கருத்துக்கணிப்பு அவசியம்

‘இந்து’ குழும சேர்மன் என்.ராம் பேசியதாவது: கருத்துக்கணிப்புக்களின் நம்பகத்தன்மை, முக்கியத்துவம் பற்றி பல்வேறு விவாதங்கள் நடக் கின்றன. கருத்துக்கணிப்புக்கு குறிப்பிட்ட காலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கூட இம்முறை கோரிக்கை விடுத்துள்ளது. கருத்துக்கணிப்பு, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்பு என்றாலே தேர்தல் ஆணையத்துக்கு அலர்ஜியாகிவிடுகிறது.

சமீபத்தில் நடந்த ரகசிய கள ஆய்வு ஒன்றில், ‘கருத்துக்கணிப்பு களை போலியாக, ஒரு தரப்புக்குச் சாதகமாக தயாரிக்க முடியும்’ என்பது தெரியவந்தது. இது சாதாரண விஷயம் அல்ல.

இதைப் பற்றி தீவிர விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். சில கருத்துக்கணிப்புகளில் உண்மைத்தன்மை இல்லை தான். சிலர் அதை நியாயமாகச் செய்வதில்லை. ஆனாலும்கூட, கருத்துக்கணிப்புக்கள் மிக அவசியமானவை. இவ்வாறு ‘இந்து’ என்.ராம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x