Published : 11 Jun 2021 07:30 PM
Last Updated : 11 Jun 2021 07:30 PM

மதுரையில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது: முறையான அறிவிப்பு இல்லாததால் 90 தடுப்பூசி மையங்களும் வெறிச்சோடின

மதுரை

மதுரையில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாவட்டம் முழுவதும் மூடிக்கிடந்த 90 மையங்களில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

ஆனால், தடுப்பூசி வந்த தகவல் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை முறையாக தெரிவிக்காததால் அனைத்து தடுப்பூசி மையங்களும் பொதுமக்கள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு, தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசிகள் ஒதுக்காததால் மக்கள் தினமும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.

மதுரையில் தொடர்ந்து தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டினாலும் தடுப்பூசி வராததால் மதுரை மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வரை கையிருப்பில் ஒரு தடுப்பூசி கூட இல்லாததால் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் செயல்பட்ட 90 தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டன.

இந்நிலையத்தில் 80 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்ததில் மதுரைக்கு 2,500 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனால், இன்று மதியத்திற்கு பிறகு மதுரையில் உள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி 90 மையங்களில் தொடங்கியது.

இந்த தகவல் உடனடியாக மக்களுக்கு முறையாக தெரிவிக்காததால் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி போட மக்கள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டிருந்தன.

தற்போது கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே வந்துள்ளன. அதுவும் இரண்டாவது டோஸ் மட்டுமே போடப்பட்டன. மதுரை அரசு மருத்துவமனை சார்பில் மாநகராட்சி இளங்கோவன் பள்ளியில் தினமும் பல கி.மீ., தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பார்கள். அவர்களுக்கு டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடப்படும். ஆனால், இன்று தடுப்பூசி வந்த தகவலை பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை முறையாக அறிவிக்காததால் மக்கள் தடுப்பூசி போட வரவில்லை.

இதுகுறித்து தடுப்பூசி மைய ஊழியர்களிடம் கேட்டபோது, ‘‘தடுப்பூசி போடும் பணி மட்டுமே எங்களுடையது. பொதுமக்களுக்கு முறையாக சுகாதாரத்துறைதான் அறிவித்திருக்க வேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x