ரூ.23 கோடி பணம் பெற்று மோசடி; சர்வதேச விளையாட்டு வீரர் புகார்: பள்ளிக்கரணை போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூ.23 கோடி பணம் பெற்று மோசடி; சர்வதேச விளையாட்டு வீரர் புகார்: பள்ளிக்கரணை போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சர்வதேச டென் - பின் பவுலிங் விளையாட்டு வீரர் அளித்த நிலமோசடி புகார் தொடர்பான வழக்கின் புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பதக்கங்களை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த டென்-பின் பவுலிங் விளையாட்டு வீரர் ஷேக் அப்துல் ஹமீது. டில்லியைச் சேர்ந்த இவர், சென்னை கோவிலம்பாக்கத்தில் 4.12 ஏக்கர் நிலத்தை வாங்க பாலாஜி, மீனா ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

நிலத்துக்காக 23 கோடி ரூபாயை பெற்று தன்னை மோசடி செய்து விட்டதாக, டென்பின் பவுலிங் விளையாட்டு வீரர் ஷேக் அப்துல் ஹமீது சென்னை பள்ளிக்கரணை போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாலாஜி, மீனா உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை பள்ளிக்கரணை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாலாஜி, மீனா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஷேக் அப்துல் ஹமீது இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை ரத்து செய்யக் கோரியவர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், பள்ளிக்கரணை போலீஸார் புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in