

தடகள வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் ஜிஎஸ்டி அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனியாக 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற, தடகள பயிற்சி அகாடமியை பிராட்வே பகுதியில் நடத்தி வருகிறார். பயிற்சிக்கு ஆண், பெண் அனைவரும் வருவர்.
இந்நிலையில் பயிற்சிக்கு வந்த தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகராஜன் மீது புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த போலீஸார் விசாரணையின் முடிவில் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் மே 28 ஆம் தேதி நாகராஜன் கைது செய்யப்பட்டு போக்சோ நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி நாகராஜன் தாக்கல் செய்த மனு போக்சோ நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பரூக் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதி, நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.