Published : 11 Jun 2021 01:25 PM
Last Updated : 11 Jun 2021 01:25 PM

வழக்கமாகவே இப்படி தாமதமாகத் தான் பணிக்கு வருவார்களா? மதுரையில் வணிக வரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமைச்சர் கேள்வி

வழக்கமாகவே இப்படி தாமதமாகத் தான் பணிக்கு வருவார்களா என மதுரையில் வணிக வரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமைச்சர், இணை ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் நிலுவையில் உள்ள வணிக வரியை விரைந்து வசூல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் இன்று வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வணிக வரித்துறை அலுவலக செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அலுவலகம் தொடங்கும் நேரமான 10 மணிக்கு அலுவலக வளாகத்திற்கு வந்த அமைச்சர் ஒவ்வொரு தளத்திலும் செயல்படும் அலுவலகங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்,

30 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரக்கூடிய சூழலில் மிகக் குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளது குறித்தும் கேள்வி எழுப்பினார். வழக்கமாகவே பணிக்கு அனைவரும் தாமதமாக தான் வருவார்களா என இணை ஆணையரிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கால தாமதமாக அலுவலகத்திற்கு வந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் நிலுவையில் உள்ள வணிக வரியை வசூல் செய்ய வேண்டும் எனவும், போலி நிறுவனங்கள் வைத்து வணிக வரி உரிமம் எடுக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு வளாகத்தில் உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஒத்தக்கடை, தல்லாகுளம், சொக்கிகுளம், தெப்பக்குளம் சார்பதிவாளர் அலுவலகங்களில் வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார் .

டிஐஜி சுவாமிநாதன் உள்ளிட்டோரிடம் சோதனையின் போது பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவர் நேற்று திடீர் ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் ஆய்வு நடத்தினார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பத்திரப்பதிவு நடைபெற்றதால் அதிகாரிகளை அமைச்சர் மூர்த்தி கடுமையாக எச்சரித்தார். ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, டோக்கன் முறையில் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

துறை ரீதியாக உடனடி நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டத்தை குறைக்க, டோக்கன் வழங்கி ஒலிப்பெருக்கி மூலம் மக்களை ஒழுங்கு படுத்த உத்தரவிட்டு உள்ளோம். நிரந்தரமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு கால தாமதம் ஆகாமல் பதிவுப்பணிகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திர எழுத்தாளர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இடையே இடைத் தரகர்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு உள்ளோம். இடைத்தரகர்களை ஈடுபடுத்தினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம், இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

தினமும் சரியாக 10 மணிக்கு பத்திரப்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் சரியான நேரத்தில் பதிவுகள் துவங்கியதில்லை.

கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் அதிகாரிகள் சரியாக பணியாற்றி வருகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் கூறுவதுபோல் கரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அரசு வெளிப்படை தன்மையுடனேயே செயல்படுகிறது.

மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்கான இடம் இன்னும் ஓரிரு தினங்களில் தேர்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x