தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ரோப் கார் பணிகளை ஆய்வு செய்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு.
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ரோப் கார் பணிகளை ஆய்வு செய்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு.
Updated on
2 min read

தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இந்து சுமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மலை மீது யோக நரசிம்மராக பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் இந்தக் கோயில் சுமார் 750 அடி உயரமுள்ள செங்குத்தான பாறை மீது அமைந்துள்ளது. மொத்தம் 1,305 படிகளில் ஏறிச் சென்றால், அமிர்தவள்ளி தாயார் மற்றும் யோக நரசிம்மரைத் தனித்தனி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். செங்குத்தான படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய சிரமப்படுகின்றனர்.

இதனால், மலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இதற்காக, பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கும் பணி 2014-ம் ஆண்டு தொடங்கியது. மிகவும் தாமதமாக நடைபெற்று வந்த இந்தப் பணி, தற்போது 90 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளது.

கடந்த ஆண்டே பணிகள் நிறைவுற்று, பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பணிகள் கிடப்பில் உள்ளதால், இந்த ஆண்டு கார்த்திகை பெருவிழாவுக்கு முன்பாக ரோப் கார் திட்டத்தை முடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் பணிகளை ஆய்வு செய்ய இன்று (ஜூன் 11) காலை சோளிங்கருக்கு திடீரென வருகை தந்தார். சோளிங்கர் நகரில் லட்சுமி நரசிம்மர் கோயில் உற்சவ மூர்த்திக்காகக் கட்டப்பட்டுள்ள பக்தோசித பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், ரோப் கார் பணிகள் நடைபெறும் மலையடிவாரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சார் ஆட்சியர் இளம்பகவத், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர்கள் விஜயா, ஜெயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின்போது, கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ரோப் கார் அமைந்துள்ள பகுதிக்கும் பக்தர்களின் வாகனம் நிறுத்துமிடத்துக்கும் அதிக தொலைவு உள்ளதால், வாகன நிறுத்துமிடத்தை ரோப் கார் பகுதிக்கு மிக அருகில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ரோப் கார் பணிகள் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்றும் விசாரித்தார். "கேபிள் இணைப்புப் பணிகள் முடிந்த நிலையில், பெட்டிகளைப் பொருத்தி பாதுகாப்பு சோதனை மட்டும் நடத்த வேண்டும். இதற்கு மூன்று மாத காலம் ஆகும்" என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"ரோப் கார் பணியை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். முடிந்தால் நானே அவ்வப்போது வந்து ஆய்வு செய்கிறேன்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறும்போது, "சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்கள் பயன்பாட்டுக்கு நிச்சயம் கொண்டுவரப்படும்.

தமிழகத்தில் குடமுழுக்கு விழா பணிகள் நடைபெற உள்ள பெரிய மற்றும் வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு, குடமுழுக்கு விழா நடைபெற உள்ள கோயில்களின் பட்டியலை முதல்வர் வெளியிடுவார்.

தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பாதையில் செல்ல முடியாத பக்தர்களை டோலி மூலம் சுமந்து செல்லும் தொழிலாளர்களுக்கு ரோப் கார் திட்டம் முடிந்த பிறகு அவர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள சுவேதாரண்யேசுவரர் கோயில் மற்றும் வடலூரில் ஆய்வுப் பணிக்காக அமைச்சர் சேகர்பாபு புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in