Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

பொதுமக்கள் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை; தாமத பதிவுக்கும் இடமில்லை- பிறப்பு, இறப்பு விவரம் பெற்று சான்றிதழை விநியோகிக்கும் சென்னை மாநகராட்சி: தமிழகம் முழுவதும் இதே வழிமுறைகளை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை

பொதுமக்களிடம் இருந்து பிறப்பு, இறப்பு விவரங்களைப் பெற்று, பதிவு செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது சென்னை மாநகராட்சி. இங்கு தாமதப் பதிவுக்கே வேலையில்லை. இதேபோன்று மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் வளர்ச்சி திட்டங்களை வகுக்க பிறப்பு, இறப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் அவசியம். அதற்காக 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்புபதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி 2000-ம்ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்புபதிவு விதிகள் உருவாக்கப்பட்டன. அதில் கடந்த 2017-ம் ஆண்டு சிலதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, பிறப்பு, இறப்பு பதிவுகளை 21 நாட்களுக்குள் செய்தால் கட்டணம் கிடையாது. 22-வது நாள்முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய தாமதக் கட்டணம் ரூ.2-ல்இருந்து ரூ.100 ஆகவும், 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதியரூ.5-லிருந்து ரூ.200 ஆகவும், ஓராண்டுக்கு மேல் பதிய ரூ.10-ல்இருந்து ரூ.500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.200 ஆகவும், இலவசமாக வழங்கப்பட்ட கூடுதல் நகலுக்கு தலா ரூ.200 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில்,தாமத இறப்பு பதிவுக்கான கட்டணத்திலிருந்து பொதுக்களுக்கு விலக்குஅளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதேநேரம், சென்னை மாநகராட்சி போன்று பிறப்பு, இறப்பு பதிவை மற்ற மாநகராட்சிகளிலும் செயல்படுத்தினால், தாமதக் கட்டணத்துக்கே வேலை இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

சென்னையில் வீட்டில் இறப்புஏற்பட்டால், சடலம் மயானத்துக்கு வரும்போது இறந்தவரின் விவரங்களை பெற்று மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது. அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறப்பு ஏற்பட்டால், அதை 21 நாட்களுக்குள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றுவது மருத்துவமனைகளின் பொறுப்பு.அதை பரிசீலித்து மாநகராட்சி நிர்வாகம் இறப்பு சான்றை இணையதளத்தில் பதிவேற்றுகிறது.

இங்கு மக்கள் எந்த பதிவும் செய்யாமலேயே இறப்பு சான்று கிடைத்து விடுகிறது. தமிழகத்திலேயே இங்கு மட்டுமே இறப்பு சான்று இலவசமாக கிடைக்கிறது.

பிற மாநகராட்சிகளில் மயானங்களில் வழங்கப்படும் சான்றை பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்து, ஒவ்வொரு சான்றுக்கும் தலா ரூ.200 செலுத்தி பெறும் நடைமுறை உள்ளது. எனவே, பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் சென்னை மாநகராட்சி நடைமுறையை செயல்படுத்தலாம்.

கிராமப் பகுதிகளில் பிறப்பு, இறப்பு ஏற்பட்டால் அதை பதிவது கிராம உதவியாளரின் கடமை. அதை செய்யாவிட்டால் அவர் மீதுநடவடிக்கை எடுக்கலாம். அதை சரிசெய்தாலே பிறப்பு, இறப்பு தாமதப் பதிவை அரசு தவிர்க்க முடியும். ஓராண்டுக்கு பின் செய்யப்படும் இறப்பு பதிவு கட்டணத்தை அரசு ரத்து செய்திருந்தாலும், இறப்பு சான்று பெற பொதுமக்கள், தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியரை அணுக வேண்டும்.

வாரிசு சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துவிட்டு பல மாதங்கள் சான்று கிடைக்காமல், மாவட்ட ஆட்சியரை பலமுறை அணுகியும்கூட சான்று கிடைப்பதில்லை. இந்நிலையில் கோட்டாட்சியரிடம் அனுமதி சான்றுபெற்று இறப்பை பதிவு செய்வது ஏழைகளால் இயலாத ஒன்று. எனவே தாமதப் பதிவை தவிர்க்க சென்னை மாநகராட்சி போன்று மாநிலம் முழுவதும் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x