

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் இரவிலும் காணும் வகையில் ஒளிக் காட்சி உருவாக்க வேண்டும் என்று சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றுலா துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அவர் கூறியதாவது:
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த18 மாதங்களாக உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுலாவை வாழ்வாதாரமாக கொண்டு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தங்கள் வருவாயை இழந்துள்ளனர்.
வருங்காலத்தில், அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வரும்பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நோய் தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களின் வருவாயை அதிகரிக்கவும், முதல்வரின் ஆலோசனையை பெற்று, வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக திகழ்கிறது. அங்கு வரும்உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், திருவள்ளுவர் சிலையின் அழகை இரவிலும் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில், முதல்வரின் ஆலோசனையை பெற்று சீரொலி சீர்மிகு காட்சி (Landmrk Lighting and Projection Show) அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் உள்ள கலைக்கூடம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
மேலும், துறை தொடர்பான வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் துறை செயலர் பி.சந்திரமோகன், துறை ஆணையர் த.பொ.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.