

திருநெல்வேலியில் இபிஎஸ் -ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடத்திவரும் சுவரொட்டி யுத்தம், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், `மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள்’ என்ற பெயரில், நேற்று முன்தினம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில், `அதிமுக கட்சி செயல்பாடுகளில், தலைமைஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே. அவ்வாறு செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனிமேலும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சுவரொட்டிகளால் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. சென்னையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது, `கட்சிக் கட்டுப்பாட்டை மீறி யார் நடந்து கொண்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கட்சியை வழிநடத்தும் சூழலில், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் பேசுவதற்கு இடம் தரக்கூடாது என்பதே தொண்டர்களின் எண்ணமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக திருநெல்வேலியில் அதிமுகவினர் நேற்று சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். அதில், `சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமைமிக்க தலைவர் கே.பழனிசாமியை தேர்வு செய்தஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், பழனிசாமியின் படம் பெரிய அளவிலும், ஓ. பன்னீர்செல்வத்தின் படம் சிறிய அளவிலும் அச்சிடப்பட்டிருந்தது.