Last Updated : 11 Jun, 2021 03:13 AM

 

Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

யானை வலசைப் பாதையில் உள்ள 50.79 ஹெக்டர் தனியார் நிலம் காடாக அறிவிப்பு: கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனை பாராட்டி புத்தகத்தை பரிசாக அளித்த வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன். உடன், கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் உள்ளிட்டோர்.

கோவை

தமிழ்நாட்டின் மிக முக்கியமான கல்லாறு யானை வலசைப் பாதையில் உள்ள 50.79 ஹெக்டர் தனியார் நிலங்கள், தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் 1949-ன்கீழ் தனியார் காடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை - நீலகிரி இடையே யானைகள் கடக்கும் மிக முக்கிய வழித்தடமாக கல்லாறு வலசைப் பாதை உள்ளது. இந்த வலசைப் பாதையில் இருக்கும் தனியார் நிலங்களால் யானைகள் அவ்வழியே செல்வதில் இடையூறுகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில், கல்லாறு யானைவலசைப் பாதையை பாதுகாக்க, மேட்டுப்பாளையம், ஓடந்துறை கிராமத்துக்கு உட்பட்டு, வனத்துக்கு நடுவே இருக்கும் 50.79 ஹெக்டர் தனியார் நிலங்களை தனியார் காடாக அறிவித்து கோவைமாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் 1949-ன்கீழ் கொண்டுவரப்பட்ட மாநிலத்தின் முதல் யானைகள் வலசைப் பாதை இதுவாகும்.

இதுதொடர்பாக ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறியதாவது: யானை வழித்தடத்தில், வனப் பகுதியை ஒட்டிய தனியார் நிலங்களில் மரங்களை வெட்டி ‘ரிசார்ட்’ போன்று வேறு ஏதேனும் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது. எனவே, அந்த நிலங்களை தனியார் காடாக அறிவித்துள்ளோம். இதன்மூலம், அங்குள்ள நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற, விற்க, கட்டிடம் கட்ட, வேலி அமைக்க, மரங்களை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

தன்னிச்சையாக அந்த நிலத்தின் பயன்பாட்டை உரிமையாளர் மாற்ற முடியாது. இதன்மூலம், யானைகள் அந்த வழியாக செல்வதில் இடையூறு ஏற்படுவதை தவிர்க்க முடியும். தனியார் காடாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையாக ஜக்கனாரி காப்புக் காடும், தெற்கு எல்லையாக உதகை - மேட்டுப்பாளையம் பிரதான சாலையும், கிழக்கில் கல்லாறு ஆறும், மேற்கில் கல்லாறு காப்புக் காடும் உள்ளன என்றார்.

கோவை வனப்பரப்பு அதிகரிப்பு

கோவை மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி வட்டத்தில் வனத்தையொட்டி காடாக இருக்கும் பகுதிகள் அரசு புறம்போக்கு நிலங்களாக இருப்பதால், அவற்றுக்கு வனத் துறை போதிய பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை இருந்தது. எனவே, வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்த 1,049 ஹெக்டர் நிலங்களை காப்பு நிலங்களாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

1882 தமிழ்நாடு வனச் சட்டத்தின் பிரிவு 26-ன்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கிருக்கும் மரங்களை யாராவது வெட்டினால் வனத் துறை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.இந்த அறிவிப்பின் மூலம் 1,22,215 ஹெக்டராக இருந்த கோவை மாவட்ட வனப்பரப்பு, 1,049 ஹெக்டர் அதிகரித்து 1,23,264 ஹெக்டராக உயர்ந்துள்ளது.

வனத்துறை அமைச்சர் பாராட்டு

யானைகள் வழித்தட பாதுகாப்புக்காக தனியார் நிலங்களை காடாக அறிவித்ததற்காகவும், கோவை மாவட்டத்தில் 1,049 ஹெக்டர் நிலங்களை காப்பு நிலங்களாக அறிவித்ததற்காகவும் கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று பாராட்டி பரிசு வழங்கினார். அதோடு, இந்த நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் உள்ளிட்டோருக்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x