ஈரோடு அடுத்த முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு அடுத்த முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர் நடவடிக்கை, கண்காணிப்பால் ஈரோட்டில் 3 ஊராட்சிகளில் கரோனா தொற்று இல்லை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

Published on

ஈரோடு மாவட்டத்தில் தொடர் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு காரணமாக, 3 ஊராட்சிகளில் கரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலர் கே.கோபால், ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகரங்களைவிட கிராமங்களில் கரோனா அதிகமாக பரவுவதால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மூன்று நாளாக சிறப்பு கவனம் செலுத்துகிறோம். நோய் பாதித்தோரை வகைப்படுத்தி, முறைப்படுத்தி சிகிச்சை வழங்குவதால், நோயிலிருந்து விரைவாக குணமாகிறார்கள்.

இம்மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமித்து நோய் தொற்று, காய்ச்சல் அறிகுறி மற்றும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் தினமும் சேகரிக்கப்படுகின்றன. இந்த தகவல்களின் அடிப்படையில் சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகளால், கரோனா பரவல் விரைவாக கட்டுக்குள் வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளும், அருகில் உள்ள நகருடன் தொடர்பில் இருப்பதால், தொற்று ஏற்படுகிறது. தொடர் நடவடிக்கையால், மூன்று ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட கரோனா நோய் தொற்று இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் திருவாச்சி ஊராட்சியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பெரியகருப்பன், தூய்மைப்பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். கரோனா தொற்று அறிகுறி குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு பணிகள் குறித்து, களப்பணியாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து முகாசிபிடாரியூர் ஊராட்சி 1010 நெசவாளர் காலனியில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு பகுதியில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in