

பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்த உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சட்டப் பிரிவு மாநில இணைச் செயலாளராகவும் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீதர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், “சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி (பிஇடி) ஆசிரியர் எபிதாஸ், கடந்த 2017-ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார். இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகமும், தவறு செய்த ஆசிரியரும் இணைந்து திசை திருப்பி அரசுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர்.
மேலும் தவறு செய்த ஆசிரியரை அதே பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்த்தியுள்ளனர். எனவே தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கழகத்திடமும் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார். அதுவும் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் ஸ்ரீதரை போனில் தொடர்புகொண்ட பி.டி கதிர் என்பவர், தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்றும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் எபிதாஸ் தனக்கு உறவினர் எனவும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே எபிதாஸ் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தி முடித்துவிட்ட பின்பு மீண்டும் எபிதாஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவது நல்லதல்ல என்றும் கூறி மிரட்டியுள்ளார். வழக்கை வாபஸ் வாங்குமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார். வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்ததால், தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வழக்கறிஞருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர் பி.டி. கதிர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ஸ்ரீதர், எழும்பூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.
அதில், “பிஎஸ்பிபி பள்ளியில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டபோது, என்னுடைய புகாரும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நான் விசாரணை கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி என் புகாரில் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களுக்கும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்தேன்.
இந்நிலையில், என்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பி.டி.கதிர் தொடர்புகொண்டு தவறு செய்த ஆசிரியர் எபிதாஸ் சார்பாக பேசுவதாக கூறி, வழக்கை நடத்தக்கூடாது என்று கூறி மிரட்டினார். எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த பி.டி கதிர் மீதும், குழந்தைகள் பாதுகாப்பு கழகத்தில் கொடுத்த புகாரில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் எபிதாஸ் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.