

சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் தலைமைக் காவலர் ரஜித்குமார் உள்ளிட்ட போலீஸார் கடந்த வாரம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து விசாரணை செய்தனர். அப்போது ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு அபராதம் விதித்தனர்.
இதனால் கோபமடைந்த அவரது தாயார் வழக்கறிஞரான தனுஜா ராஜன், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து தனித்தனி கார்களில் புறப்பட்டுச் சென்றனர். அதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி செல்வக்குமார் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ப்ரீத்தி ராஜன் மீன் வாங்கச் செல்லவில்லை. மருந்து வாங்கச் சென்றவரை போலீஸார் மறித்து அபராதம் விதித்ததால்தான் தனுஜா ராஜன் அது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார். போலீஸார் பேசிய மோசமான வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டு, தனுஜா பேசியது மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர் உணர்ச்சி வசப்பட்டே அவ்வாறு நடந்துள்ளார். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும், என வாதிடப்பட்டது.
ஆனால் அரசு தரப்பில், மனுதாரர்கள் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். எனவே முன்ஜாமீ்ன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.