Published : 28 Dec 2015 08:16 AM
Last Updated : 28 Dec 2015 08:16 AM

பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல் 16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில் சென்றார். பின்னர் 2-வது முறையாக சொந்தப்பணி இருப்பதாகக் கூறி மேலும் 90 நாள் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 3-வது கட்டமாக மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்து 17.4.1986 அதே ஆண்டு ஜுலை 17 வரை 92 நாள் விடுமுறையில் சென்றார். அவர் 2-வது மற்றும் 3-வது கட்டங்களில் எடுத்த 182 நாள் விடுமுறையை சம்பளம் இல்லா விடு முறையாகக் கணக்கில் எடுக்கப்பட்டது.

இதை ரத்து செய்யவும், 182 நாள் விடுமுறையை சொந்தப்பணிக்காக எடுத்த ஈட்டிய விடுப்பாகக் கருத உத்தரவிடக்கோரியும் ஐயப்பன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இந்த மனுவை தாமதமாக தாக்கல் செய்துள்ளார். ஓய்வுபெறும்போது, 2-வது, 3-வது கட்ட விடுமுறையால் தனக்குப் பல்வேறு பாதிப்புகள் வரும், அரசுக்கு தான் பணம் கட்ட வேண்டியது வரும் என்பதை தெரிந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனு தள்ளுபடி

அரசு ஊழியர்கள் பல வகையான விடுமுறையை தனது உரிமையாகக் கருத முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x