

ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வல்லுநர் குழுவை தமிழக முதல்வர் அமைக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று தஞ்சாவூர் நகரில் கரந்தை, கரம்பை பகுதிகளில் வடவாறு ஆற்றில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதை பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வடவாறு தஞ்சாவூர் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு மூவர்கோட்டை வரை வடவாறு என்ற பெயரிலும், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு வடவாறு விரிவாக்க கால்வாயாகவும் சென்று முத்துப்பேட்டை அருகே திருமேனி ஆறு மூலம் கண்ணனாற்றில் கலக்கிறது.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை, நீடாமங்கலம், மன்னார்குடி, மதுக்கூர்,கோட்டூர் ஒன்றியப் பகுதிகள் வழியாக சென்று 72,000 ஏக்கர் விளைநிலத்துக்கு பாசனம் அளிக்கிறது.
இந்த ஆற்றில் தஞ்சாவூர் மாநகரின் கழிவுநீர் முழுமையும் கலக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக வரக்கூடிய தண்ணீர், கடைமடைப் பகுதிக்கு வரும்போது மிகவும் மாசடைந்து துர்நாற்றத்துடன் வருகிறது.
இதனால், நிலத்தடி நீர், காற்று மாசடைந்து கடைமடை பகுதி மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகின்றனர். மேலும், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் உள்ளது. இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட பெரும்பாலான பாசன ஆறுகளில் வழியோர நகரங்களின் கழிவுநீரை ஆங்காங்கு ஆறுகளில் கலக்க செய்கிறார்கள். காவிரியில் சாயக்கழிவுகள், ஆலைகளில் வெளியேற்றப்படும் அமிலக் கழிவுகள் வரை வெளியேற்றப்படுகின்றன.
இதனால், ஆறுகள் மாசடைந்து ஆற்றுக் கரைகளில் குடியிருக்கும் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். நிலத்தடி நீர் மாசடைகிறது. விளைநிலங்கள் மலடாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆறுகளின் பாசனம் பெறும் விளைநிலங்களில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நஞ்சாகும் நிலை உள்ளது.
எனவே, விரைந்து நீதிபதி தலைமையில் ஒரு உயர்நிலை வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்து, ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, நிரந்தர தடை ஏற்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் மாநகர பொறுப்பாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.