Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டியப்பேரியில் ரூ.29 கோடியில் புதிய மருத்துவமனை: கட்டுமானப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரியில் ரூ.28.90 கோடியில் நடைபெறும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆய்வு செய்தார்.படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டியப்பேரியில் ரூ. 28.90 கோடியில் இரண்டாம்நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

கண்டியப்பேரியில், ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ், ரூ.28.90 கோடி மதிப்பில் 5,329.54 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இம்மருத்துவமனை மூன்று தளங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப் படவுள்ளது.

தரைத்தளத்தில் அவசரப்பிரிவு 868.48 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். முதல் தளத்தில் ஒருங்கிணைந்த, அவசரகால தாய் சேய் தீவிர சிகிச்சைப்பிரிவு ,பொது மருத்துவ பிரிவு (பெண்கள்) ஆகியவை, 1,756 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம், மீட்பு அறை, பொது மருத்துவப் பிரிவு (ஆண்கள்) ஆகியவை 1,559.43 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேல் தளத்தில் இயந்திர அறை 145.15 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், பொதுப் பணித்துறை (மருத்துவப்பணிகள்) செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் அருள்நிதிசெல்வன், பொறியாளர் நெகர்பானு, வட்டாட்சியர் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x