

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் விவசாயிகள் கார் சாகுபடி பணிகளை உற்சாகமாக தொடங்கியுள்ளனர். விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க அரசு கடனுதவி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி பாசன பகுதிகளில் கார் சாகுபடி ஜூன் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கார் மற்றும் பிசான நெல் சாகுபடி நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படும்.
இம்மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால், கீழக்கால் பாசன விவசாயிகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தாமிரபரணி ஆற்றில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் பகுதியில் கார் சாகுபடிக்காக தண்ணீரை கடந்த 3-ம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் மருதூர் கீழக்கால்வாய் பகுதியில் உள்ள 7,144 ஏக்கர், மேலக்கால் பகுதியில் உள்ள 11,807 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் மிகவும் உற்சாகமாக சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். வயல்களை உழவு செய்து, களைகளை அகற்றி நாற்றங்கால் அமைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதுகுறித்து நாட்டார்குளத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜ் கூறியதாவது:
விவசாய பணிகளுக்கு முறையாக விதைகள் மற்றும் இடு பொருட்களான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா காரணமாக விவசாயிகள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்னர். இதனால் 50 சதவீத விவசாயிகள் விவசாயம் செய்ய ஆர்வமின்றி உள்ளனர். எனவே , விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், உரம் மற்றும் அதை வாங்க கடன் வழங்க வேண்டும்’’ என்றார் அவர்.
இதுகுறித்து கருங்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் இசக்கியப்பன் கூறும்போது, ‘‘கருங்குளம் ஒன்றிய விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வல்லநாடு மற்றும் கருங்குளம் வேளாண்மை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து விதை நெல் வாங்கிக் கொள்ளலாம். மேலும், புதிதாக விவசாயம் செய்யும் விவசாயிகளும் தங்களது பெயர்களை பதிவு செய்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம். உரம், பூச்சிமருந்துகள் தனியார் கடைகள் மூலம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழலில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளதால் தண்ணீரை சேமிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்” என்றார்.