

வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ புதிய பேருந்து நிலைய கட்டுமான திட்டத்தில் மாற்றம் செய்வதுடன் செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்து மிடத்தை கையகப்படுத்தி மாற்று இடம் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
வேலூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத் தின் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி சுமார் ரூ.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் சுமார் 50 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தரை தளம் மற்றும முதல் தளம் என கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஆய்வுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘வேலூர் புதிய பேருந்து நிலையம், நான் அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. அப்போது, வேலூர் எம்எல்ஏவாக ஞானசேகரன் இருந்தார். மதுரை, திருச்சி போன்ற பேருந்து நிலையங்கள் பார்ப்பதற்கு லட்சணமாக உள்ளது. ஆனால், வேலூர் பேருந்து நிலையம் அப்படி இல்லை. பேருந்து நிலையத்தின் முன்பக்கம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஷெட் அமைத்து வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தை பேருந்து நிலைய பயன் பாட்டுக்கு கொண்டுவர ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று தெரிவித் தார். மேலும், கிரீன் சர்க்கிள் பகுதி யில் போக்குவரத்துக்கு இடையூ றாக உள்ள மின் கம்பத்தை அகற்றி சாலை அமைத்தால் நெரிசல் குறையும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய பேருந்துநிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது,பேருந்து நிலையம் நுழைவு வாயில்அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை கையகப் படுத்துவது குறித்து ஆலோசிக்கப் பட்டது. இதற்கு ஈடான நிலத்தை கோயிலுக்கு பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கோயிலுக்கு வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப் பட்டது.
இதுகுறித்து இறுதி முடிவுஎடுக்கப்படாத நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வு மற்றும் ஆலோ சனைக்கு பிறகு இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் முறைப்படி அரசாணை வெளி யிடப்பட்டு நிலத்தை கையகப் படுத்த ஆலோசித்து வருகின்றனர்.
அதேபோல், கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஜிஆர்டி ஓட்டல் அருகில் உள்ள மின் கம்பத்தை அகற்றினால் சாலை விரிவாக்கம் செய்து நெரிசலை தவிர்ப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்டவருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சங்கரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.