

மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 4,000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரியில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டோரே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள். கட்சியினர் உட்பட யார் ஆக்கிமித்திருந்தாலும் கண்டிப்பாக அகற்றப்படும்.
சேதமடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தப்படும். மத்தியக்குழு பார்வையிட்டபோது முதல்கட்டமாக ரூ. 182 கோடி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு மதிப்பீடு செய்து அனுப்பினோம். அதைத்தொடர்ந்து மிகுந்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மேலும் ரூ. 200 கோடி கூடுதல் நிதி கேட்க உள்ளோம்.
விரைவில் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளேன். மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்
புதுச்சேரியில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வெள்ள நிவாரணமாக தரப்படும். விரைவில் இத்தொகை வழங்கப்படும். உயிரிழந்த 2 பேருக்கு தலா ரூ. 4 லட்சம் தரப்படும். மேலும் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை விசாரித்து வருகிறோம்.
நிவாரண நிதி பட்டியல்
புதுச்சேரியில் கனழமையால் பாதிக்கப்பட்ட கல்வீடுகளுக்கு தலா ரூ. 35000 நிவாரணமும், குடிசை வீடுகளுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும்.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் 11331 ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 15,189 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரமும், காய்கறி, பருத்தி, கரும்பு, மரவள்ளி, மலர்கள் ஆகியவற்றுக்கு ரூ. 15 ஆயிரமும், வாழைக்கு ரூ. 35 ஆயிரமும், வெற்றிலைக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் தரப்படும்.
உயிரிழந்த பசு, எருமைகள் ஆகியவற்றுக்கு ரூ. 30 ஆயிரமும், கன்று, கிடாரிக்கு ரூ. 16000, வண்டிமாடு, எருதுக்கு ரூ. 25 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ. 3000, கோழிக்கு ரூ. 50, சேதமடைந்த கொட்டகைக்கு ரூ. 4000 தரப்படும்.
நிவாரணத்தொகை எப்போதும்போல் அரசு மூலமே நிவாரணம் தரப்படும். நிவாரணத்துக்காக ரூ. 150 கோடி ஒதுக்கியுள்ளோம்'' என்று ரங்கசாமி குறிப்பிட்டார்.