

சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவோர் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வதில் உள்ள குளறுபடியால், 2-வது டோஸ் செலுத்துதல், சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பலரும் ஆர்வமாக உள்ளனர்.
மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 54 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவு செய்வதிலும் குளறுபடி உள்ளது. சில மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தியவுடன் உடனுக்குடன், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பல மையங்களிலும், குறிப்பாக சிறப்பு முகாம்களிலும் நோட்டில் எழுதி வைத்து, பிறகு இணையத்தில் பதிவு செய்கின்றனர்.
ஆனால் விபரங்களை முறையாக பதிவு செய்வதில்லை. இதனால் தடுப்பூசி செலுத்திய பலருக்கு 2-வது தடுப்பூசி செலுத்துவது குறித்த எஸ்எம்எஸ் வருவதில்லை. தொடர்ந்து வலியுறுத்திய பிறகே எஸ்எம்எஸ் வருகிறது. மேலும் சிலரது விபரங்கள், தேதி போன்றவையும் தவறாக வருகிறது. இந்த குளறுபடியால் 2-வது தடுப்பூசி செலுத்துவதிலும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்புவனத்தைச் சேர்ந்த சரவணன் கூறுகையில், ‘‘எனக்கு ஆண் என்பதற்கு பதிலாக பெண் என வந்துள்ளது. இதுபோன்ற குளறுபடியால் அரசு புள்ளிவிபரங்களே மாறும். இதேபோல் தடுப்பூசி விபரத்தை தவறுதலாக பதிவு செய்தால், தேவையில்லாத சிக்கல் ஏற்படும்,’ என்று கூறினார்.