

தமிழகத்தில் 4,000 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 10) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"கரோனா பேரிடர் காலத்தில் தேவையான அளவு மருந்து மற்றும் மருத்துவ உபகரண்ஙகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் இருப்பு உள்ளது.
ரெம்டிசிவிர் மருந்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் தட்டுப்பாடு இருந்தது.
தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக, தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டு 9.5 லட்சம் அளவுக்கு ரெம்டிசிவிர் மருந்துகள் பெறப்பட்டு, அவற்றில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு 5.75 லட்சம் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது, தனியார் மருத்துவமனைகளுக்கு 1.15 லட்சம் அளவுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ரெம்டிசிவிர் மருந்துகள் கையிருப்பில் உள்ளது. ஆக, ரெம்டிசிவிர் மருந்து என்பது தனியார் மருத்துவமனைகள் அவர்கள் கேட்ட அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 115 சி.டி. ஸ்கேன் கருவிகள் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக பேரிடர் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாத காலத்தில் 1,43,530 சி.டி. ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திற்கு ரூ.25 கோடி தந்து மருத்துவப் பணிகள் சுணக்கமில்லாமலும், தொய்வில்லாமலும் நடைபெற தொடர்ந்து முதல்வர் ஊக்கப்படுத்துகிறார்.
மருத்துவமனைகளுக்குத் தேவையான பிபிஇ கிட் என்கிற முழு கவச உடைகள் நான்கு வார காலத்திற்கு தேவையான 3.5 லட்சம் அளவுக்கு கையிருப்பில் உள்ளது. என்-95 முகக்கவசம் என்பது 15 லட்சம் அளவிலும், மூன்று லேயர் முகக்கவசம், அதாவது, அறுவை சிகிச்சை முகக்கவசம் என்பது 75 லட்சம் அளவுக்கு கையிருப்பில் உள்ளது.
கரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் என்பது தேவையான அளவில் இரண்டுமாத கால அளவுக்கு கையிருப்பில் உள்ளன.
கரும்பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து ஆம்போடெரிசின் என்பது நேற்றைய வரைக்கும் 3,060 என்ற அளவில் உள்ளது. அது இன்றைக்கு 9,520 என்ற அளவுக்கு உயர்ந்து தொடர்ந்து பெறப்பட்டுள்ளது. தமிழக முதல்வரால் ஆம்போடெரிசின் மருந்துகள் 30 ஆயிரம் அளவுக்கு தேவையென்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவை தொடர்ந்து படிப்படியாக வந்துகொண்டிருக்கிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆம்போடெரிசின் மருந்துகள் கொடுக்கப்பட்டதுபோக, 3,234 என்ற எண்ணிக்கையில் கையிருப்பில் உள்ளது.
இம்மருந்திற்கு மாற்று மருந்தாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி பொசகொனசோல் என்ற மாற்று மாத்திரை மருந்து 90 ஆயிரம் கொள்முதல் செய்வதற்கு பணம் செலுத்தப்பட்டு, 42 ஆயிரம் மருந்துகள் பெறப்பட்டுள்ளது. அதில் 39,500 மருத்துகள் கையிருப்பில் உள்ளது.
தடுப்பூசியை பொறுத்தவரை 7,000 பெறுவதற்கு முயன்று, 4,000 வரப்பெற்றுள்ளது. அந்த 4,000 தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவைப்படும் மருந்துகள் மருத்துவப் பணிகள் கழகத்திலிருந்து வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 1.20 லட்சம் நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு ஹெச்.ஐ.வி தொற்றுக்கான கூட்டு மருந்து சிகிச்சையினை 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தாயிடமிருந்து குழந்தைக்கு ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று பரவாமல் தடுக்கும் இத்திட்டத்தினை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இந்திய நாட்டிலேயே முன்னணி மாநிலமாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் பால்வினை நோய் தொற்று சிகிச்சைக்கென 776 சுகவாழ்வு மையம் எனும் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஹெச்.ஐ.வி/எய்ட்ஸால் தொற்றுக்குள்ளான மற்றும் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசால் 'ஹெஎச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை' ஆரம்பிக்கப்பட்டு, 2008-2009 ஆம் ஆண்டில் ரூ.5.00 கோடி நிதி வழங்கப்பட்டு தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனில் சுழல் நிதியாக வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சுமார் ரூ.25.00 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டில் 3,139 ஹெச்.ஐ.வி / எய்ட்ஸால் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட / பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.82.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.