Last Updated : 10 Jun, 2021 07:47 PM

 

Published : 10 Jun 2021 07:47 PM
Last Updated : 10 Jun 2021 07:47 PM

லஞ்சம் வாங்கிய மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் அதிரடி கைது: ஒப்பந்ததாரர்களையும் கைது செய்தது சிபிஐ

மதுரை

மத்திய அரசு திட்டப்பணிகளுக்கான செலவுத் தொகையை வழங்க லஞ்சம் வாங்கிய மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளரை சிபிஐ போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். லஞ்சம் கொடுக்க முயன்ற ஒப்பந்ததாரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் மத்திய பொதுப்பணித்துறை அலுவலக நிர்வாகப் பொறியாளராக பணிபுரிபவர் பாஸ்கர். இவர் மீது பல்வேறு லஞ்சப் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாஸ்கரின் நடவடிக்கைகளை சிபிஐ போலீஸார் கண்காணித்து வந்தனர். அவரது செல்போன் அழைப்புகளை சேகரித்து வந்தனர்.

அப்போது மத்திய அரசுப் பணிகளுக்கான பணத்தை உடனடியாக வழங்க ஒப்பந்ததாரர்களிடம் பாஸ்கர் லஞ்சம் வாங்குவதை சிபிஐ போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகியோர் தங்களுக்கு வர வேண்டிய பில் பணத்தையும், ஜிஎஸ்டி பணத்தை திரும்ப தருமாறும் பாஸ்கரிடம் கேட்டிருந்தனர். அதற்கு லஞ்சம் தர வேண்டும் என்றும், லஞ்சப் பணத்தை வீட்டிற்கு வந்து தருமாறும் பாஸ்கர் தெரிவித்தார்.

இந்த தகவல் சிபிஐக்கு தெரியவந்ததும், சிபிஐ எஸ்பி கிருஷ்ணமூத்தி உத்தரவின் பேரில் டிஎஸ்பி தண்டபாணி தலைமையில் சிபிஐ போலீஸார் பாஸ்கரன் வீ்ட்டை கண்காணித்து வந்தனர்.

ஏற்கெனவே பேசியபடி ஒப்பந்ததாரர்கள் இருவரும் மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள மத்திய அரசு அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள பாஸ்கரின் வீட்டுக்கு நேற்று இரவு சென்று லஞ்சப்பணம் ரூ.70 ஆயிரத்தை பாஸ்கரிடம் கொடுத்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ போலீஸார் பாஸ்கர் மற்றும் அவருக்கு லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், பாஸ்கரின் அலுவலகத்தில் சோதனை நடத்தி ஒப்பந்ததாரர்களிடம் வாங்கிய லஞ்சப் பணம் ரூ.1.85 லட்சத்தை கைப்பற்றினர். பாஸ்கர் உள்ளிட்ட 3 பேரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி எம்.சிவபிரகாசம் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x