Published : 10 Jun 2021 06:26 PM
Last Updated : 10 Jun 2021 06:26 PM

ஒரே நாளில் 1.09 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன

சென்னை

ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 95,120 டோஸ் கோவாக்சின் கரோனா தடுப்பூசி மருந்துகள், புனேவிலிருந்து 14,420 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகரித்தது. முதல் அலை பரவலின்போதே இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கி மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் போடும் இயக்கத்துக்கு ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள் தற்போது நோய்ப்பரவல் அதிகரித்ததை அடுத்து ஆர்வமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் இயக்கமும் தொடங்கப்பட்டதால் ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகத் தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு இதுவரை வந்துள்ள தடுப்பூசிகள் 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம். இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகள் அளவு 97 லட்சத்து 62 ஆயிரத்து 957. கையிலே இருப்பது வெறும் 1060. இது சென்னையில் மட்டும். 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை என்ற நிலை உள்ளது.

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து ஜூன் மாதம் வருவதாகச் சொல்லப்படுவது 37 லட்சம் தடுப்பூசிகள். 6.5 லட்சம் தடுப்பூசிகள் 9ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை வரும். அப்படி வந்தால் மாவட்ட அளவில் பிரித்து அனுப்புவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து புளூ டார்ட் விமானம் மூலம் 556 கிலோ எடைகொண்ட 17 பார்சல்களில் 95 ஆயிரத்து 120 கோவாக்சின் கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. இதேபோன்று 14,420 தடுப்பூசிகள் புனேவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநிலத் தடுப்பூசி சேமிப்பு மையத்திற்குக் கொண்டு சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x