

‘‘கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு துறையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை, விருப்பம் இல்லாமல் அத்துறை அமைச்சராக பணியாற்றி வருவதோடு, மன வெறுப்பில் இருக்கிறார், ’’ என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.
அதில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கியுள்ளது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு மதுரை அதிமுக அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
மதுரையில் கரோனாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலை தான் உள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வமாக இருந்தாலும், எப்போது தடுப்பூசி கிடைக்கும் என ஆட்சியர்களுக்கும் தெரியவில்லை. மக்களுக்கும் தெரியவில்லை.
மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போடவந்து ஏமாந்து செல்கின்றனர். மக்களை அலையவிடுவது கண்டனத்துக்குரியது. தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை.
இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கான தடுப்பூசியூம் இல்லை. முதல் டோஸ் தடுப்பூசியும் இல்லை. முதல்வர் முகக்கவசம் எப்படி போடுவது என அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். ஒருவருடத்திற்கு முன்பே முகக்கவசம் போட மக்களுக்குத் தெரியும். தடுப்பூசி வாங்குவதில் சாணக்கியத்தனமாக செயல்படவேண்டும்.
தடுப்பூசிகளை பெற முதல்வரும், அமைச்சர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு போயிருக்கலாம். தடுப்பூசியை கேட்டு வாங்கியிருக்கலாம். கரானோவால் இறந்தவர்களுக்கு பிரதமர் பத்து லட்சம் அறிவித்தார். முதல்வர் ஐந்து லட்சம் அறிவிக்கிறார்.
ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலின். ஆனால், தற்போது கரோனாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்க மறுக்கின்றனர்.
என் தொகுதியிலேயே நிறைய பேருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுக்கவில்லை. கரோனாவால் இறப்பவர்களுக்கு காரணம் போட முடியாது என கூறப்படுகிறது. பிறகு எப்படி அந்த நோயால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியும்.
கரோனாவால் இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழ் விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். 5 லட்சம் கொடுப்பேன் என சொல்லிவிட்டு இறப்புக்கான காரணம் போடவிட்டால் எப்படி பணத்தை மக்கள் பெற முடியும். ஐ.பெரியசாமிக்கு இன்னும் துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் அமைச்சராக உள்ளார்.
அந்த துறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மனவெறுப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே கூட்டுறவு துறையை கணினி மயமாக்கி உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கணினி மயமாக்கப்பட்டு அனைத்து கடன் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன கடன், யார் வாங்கியது என்ற விவரங்கள் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பயிர்க்கடன் இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியாது. யார் எங்கேயும் தவறு செய்ய முடியாது. 1988 விலக்கு பெற்று ஒவ்வொரு கூட்டுறவுத்துறை தேர்தலும் நடைபெற்றது. தவறு செய்தவர்கள் கூட்டுறவுத்துறை தேர்தலில் நிற்க வழிவகைசெய்தவர் கருணாநிதி.
என் துறையை பற்றி பேசவும் ,குறை கூறினால் அதற்கு பதில் சொல்லவும் நான் தயார்.
விவசாயிகளின் நண்பன் என திமுக நாடகம் மட்டுமே ஆடுவார்கள். கோடிக்கணக்கில் விவசாய பயிர்க்கடன்களை கொடுத்தது அதிமுக. கரோனா நேரத்திலும் கடன்களை அள்ளிக்கொடுத்தது அதிமுக.
இவ்வாறு அவர் பேசினார்.