

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போட வேண்டும் என தமிழக அரசுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
விருதுநகரில் சிவகாசி சாலையில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலையில் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து எம்.பி. மாணிக்கம்தாகூர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், கரோனா காலத்தில் தீப்பெட்டி தொழில் தொடர்ந்து நடக்க அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு நன்றி. கரோனா காலத்தில் எவ்வாறு தீப்பெட்டித் தொழில் நடைபெறுகிறது என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 50 சதவிகித பணியாளர்களுடன் குறிப்பிட்ட விதிமுறைகள்படி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்களை தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது மாநில அரசின் கடமை. இதற்கு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று பட்டாசு ஆலைகளைத் திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் இரண்டும் மாவட்ட பொருளாதாரத்தின் இரு கண்கள். பட்டாசுத் தொழிலைத் தொடங்க நல்ல முடிவை முதல்வர் எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வருக்கு நானும் கடிதம் எழுத உள்ளேன்.
பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மீண்டும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாநில அரசுகள் வேண்டும் என்றால் நீட் நடத்தப்படும். வேண்டாம் என்றால் நடத்தப்படாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலை. ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை ஒரே நாடு ஒரே கொள்கை ஒரே நீட் என்று திணிப்பதின் விளைவாகத்தான் தாராபுரத்தில் முருகன் தோல்வியுற்றார். வீம்பு பேசி தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு இயக்கமாக பாஜக மாறிக்கொண்டிருக்கிறது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக முதல்வர் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான மசோதாவை கொண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.