

வேலூர் அருகே கள்ளச்சாராய ரெய்டுக்குச் சென்ற காவல்துறையினர், வீடுகளில் பீரோக்களை உடைத்து ரூ.8.5 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற புகாரில் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை ரயில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மாவட்டக் காவல் நிர்வாகம் சார்பில் கள்ளச்சாராய ஒழிப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில் வாகனத் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் அருகேயுள்ள குருமலை என்ற மலை கிராமத்துக்கு அருகில் உள்ள நச்சுமேடு என்ற குக்கிராமத்தில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சுவதாக அரியூர் காவல்நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவலர்கள் நேற்று (ஜூன் 9) சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அந்த கிராமத்தில் இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோர் சாராயம் காய்ச்சுவதாகக் காவலர்களுக்குத் தகவல் தெரியவந்தது. அவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்த்தபோது யாரும் இல்லை.
இதையடுத்து இரண்டு பேரின் வீடுகளில் இருந்த சுமார் 1,000 லிட்டர் சாராய ஊரல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருட்களைப் பறிமுதல் செய்து காவலர்கள் அழித்தனர். பின்னர், யாரும் இல்லாததால் காவலர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது காவலர்கள் பணம் மற்றும் நகைகளைத் தங்களுடன் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சாராய ரெய்டுக்கு வந்த காவலர்கள், செல்வம் மற்றும் இளங்கோ ஆகியோரின் வீட்டில் நுழைந்து பீரோவை உடைத்து ரூ.8.5 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நச்சுமேடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், பாகாயம் காவல்நிலைய ஆய்வாளர் சுபா, மலை கிராமத்துக்கு விரைந்து சென்றபோது, மலைப் பாதையில் எதிரே வந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்களை வழிமறித்து அவர்களை நச்சுமலை கிராமத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், காவல்துறையினர் திருடிச் சென்றதாகக் கூறப்பட்ட பணம் மற்றும் நகைகள் செல்வம் மற்றும் இளங்கோ குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை கிராம மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்நிலையில் கள்ளச்சாராய ரெய்டுக்குச் சென்ற காவலர்கள் பணம் மற்றும் நகையைத் திருடிய புகார்கள் குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று இரவு விசாரணையைத் தொடங்கினார். இதன் முடிவில், உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 454 (அத்துமீறி நுழைதல்), 380 (நகை, பணத்தைத் திருடுதல்) என இரண்டு பிரிவுகளின் கீழ் அரியூர் காவல் நிலையத்தில் இன்று (ஜூன் 10) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''கள்ளச்சாராயம் காய்ச்சும் புகாரின்பேரில் ரெய்டுக்குச் சென்றவர்கள் இளங்கோ, செல்வம் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் மலை கிராமத்தில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கிராம மக்கள் சிலர் நகை, பணம் திருட்டுப் போனதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் சுபா, நேரில் சென்று விசாரணை நடத்த அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சென்று விசாரணை நடத்தியதுடன் அவர்களது வீட்டிலேயே இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவர்களிடம் முறைப்படி ஒப்படைத்தோம். காவலர்கள் யாரும் பணத்தைத் திருடவில்லை'' என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கூறும்போது, ''விசாரணை நடத்தி வருகிறோம். அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். எனினும் காவலர்கள் மூவரும் இடைநீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.