Published : 10 Jun 2021 01:51 PM
Last Updated : 10 Jun 2021 01:51 PM

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சுகாதாரத்துறை பரிந்துரை

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்க முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று இரண்டாம் அலையின் தாக்கம் இந்திய அளவில் எதிரொலித்தது. அது தமிழகத்திலும் எதிரொலித்தது. தமிழகத்தில் பெருகி வந்த கரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் போனது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும், தொற்று எண்ணிக்கை அதிகரித்து நாளொன்றுக்கு 35,000 எனத் தொற்று எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. சென்னையில் 6000க்கு மேல் தொற்று எண்ணிக்கை தினசரி பதிவானது.

இதையடுத்து முழு ஊரடங்கு அமலானது. அதிலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதால் மே 24 முதல் முழு தளர்வுகளற்ற ஊரடங்கு அமலானது. இதனால் தொற்று எண்ணிக்கை ஓரளவு குறையத் தொடங்கியது. ஆனாலும், வேகமாகக் குறையவில்லை என்பதால் ஜூன் 7ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல மாவட்டங்களில் குறைந்தாலும் 11 மாவட்டங்களில் தொற்று அதிகம் இருந்ததால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் ஜூன் 14 வரை ஊரடங்கு அமலானது.

ஆனாலும், இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொற்று எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு பெரிதாகக் குறையவில்லை. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிருப்தி தெரிவித்தது. ஊரடங்கில் தளர்வுகள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படவில்லை, கட்டுப்பாடின்றித் திரிய இது கொண்டாட்டக் காலமல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வரும் வேளையில், இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வருடன் தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கின் நிலை, மாவட்டங்களில் ஊரடங்கு அமலாவது, சட்டம்- ஒழுங்கு, நோய்த் தொற்றுப் பரவல், தடுப்பூசி, ஊரடங்கை நீட்டிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதில் ஊரடங்கைத் தற்போதுள்ள தளர்வுகளுடன் இதே நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் மருத்துவ நிபுணர்களை ஆலோசித்து ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x