கோயில் நிலங்களில் குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்: எல்.முருகன் கோரிக்கை

கோயில் நிலங்களில் குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்: எல்.முருகன் கோரிக்கை
Updated on
2 min read

அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட கோயில் ஊழியர்களை அனைவருக்குமான ஊதியத்தைக் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்க வேண்டும். அது அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“சென்னை உயர் நீதிமன்றம் கோயில்கள், மற்றும் புராதான சின்னங்கள் பாதுகாக்க உத்தரவுகளை வழங்கியுள்ளதை பாஜக பெரிதும் வரவேற்றுப் பாராட்டுகிறது. நினைவுச் சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க மாமல்லபுரம் உலக புராதான பகுதி மேலாண்மை ஆணையத்தை எட்டு வாரங்களில் அமைக்க வேண்டும்.

17 பேர் கொண்ட குழுவில் இந்திய, மாநிலத் தொல்லியல் துறை பிரதிநிதிகள், வரலாற்று அறிஞர்கள் பொதுப்பணித்துறை பிரதிநிதிகள், இணை கமிஷனருக்கு இணையான அறநிலையத்துறை அதிகாரி, தகுதியான ஸ்தபதி, ஆகம சிற்ப சாஸ்திர நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என வழிகாட்டி உள்ளது.

குழுவின் ஒப்புதல் இல்லாமல் மத்திய, மாநிலச் சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், கோயில்கள், சிலைகள், சிற்பங்கள் மற்றும் சுவர் சித்திரங்களில் எந்த மாற்றமும் சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்த்தால் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்படும் எந்தப் பணிக்கும் - முறைகேட்டிற்கும் இந்தக் குழுவே பொறுப்பு என்றாகிறது.

பாரம்பரியக் கோயில்கள், பாரம்பரியமற்ற கோயில்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க, புனரமைக்க நடைமுறைகள் அடங்கிய கையேட்டை 12 வாரங்களில் அரசு இறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

தொல்லியல் துறை 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோயில்களை ஆய்வு செய்து அதன் சேதத்தை மதிப்பிட வேண்டும். மக்களின் பரிசீலனைக்காக தொல்லியல் துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள், கோயில்கள் பற்றித் தகவல் தெரிவிக்க பொதுவான இணையதளத்தை தொல்லியல் துறை உருவாக்க வேண்டும்.

கோயில் நிதியை, முதலில் கோயில் பராமரிப்பு, விழாக்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள் என ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். உபரித்தொகை இருந்தால் மற்ற கோயில்களில் பராமரிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள ஊழியர்களுக்கு பெரும் ஆதரவு அளிப்பதாக இருக்கும்.

கோயில் நிலங்களுக்கு அரசோ அல்லது அறநிலையத்துறை கமிஷனர் தான் அறங்காவலர் எனவும், தானம் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக, இந்த நிலங்களை விற்கவோ, கொடுக்கவோ கூடாது. கோயில் வசம்தான் இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும். கோயில் நிலங்களைப் பொறுத்தவரை பொதுநோக்கம் என்ற அம்சத்தை எடுத்துவரக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்தியதன் காரணமாக கோயில் நிலங்களைச் சூறையாடுவது தவிர்க்கப்படும்.

குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை ஆறு வாரங்களில் தயாரித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்களை வெளியேற்றவும், பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள சிலைகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றைப் புகைப்படங்கள் எடுக்க வேண்டும். திருடப்பட்ட சிலைகள், பொருட்களின் விவரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் அனைவருக்குமான ஊதியத்தைக் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்க வேண்டும். அது அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும். இதுநாள் வரை கவனிக்கப்படாத அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். இந்தத் திருப்புமுனை தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்தையும் அரசு செயல்படுத்த முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in