Published : 10 Jun 2021 12:32 PM
Last Updated : 10 Jun 2021 12:32 PM

ஜூன் 14-ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; அடையாள அட்டை கட்டாயம்; நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை

அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் ஜூன் 14 அன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும் எம்எல்ஏக்கள் அடையாள அட்டையுடன் வருமாறும், நிர்வாகிகள், தொண்டர்கள் யாருக்கும் கட்சி அலுவலத்திற்குள் அனுமதி இல்லை என்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. மே 2ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக ஆட்சி அமைத்தது. 65 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யும்போது ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. பின்னர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் இன்றுவரை இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கட்சித் தலைமையால் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்வு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக தலைமை உள்ளது.

இதை அடுத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டு அதற்காக காவல்துறை அனுமதி கோரப்பட்டு, ஜூன் 14 அன்று கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14, திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், இன்னும் பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜூன் 14 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளதால் கரோனா பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் தலைமை அலுவலகத்திற்கு வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, கட்சித் தலைமை அலுவலக வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x