Published : 10 Jun 2021 12:05 PM
Last Updated : 10 Jun 2021 12:05 PM

இது தோனி ஆடிய இடம்; பி.டி.உஷா ஓடிய தடம்; ரயில்வே மைதானங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதீர்கள்: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் வேண்டுகோள்

சென்னை

இந்திய ரயில்வேக்குச் சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் விளையாட்டு சேவை முடக்கப்படும். இதனால் பல வீரர்கள் உருவாவதும் தடுக்கப்படும் மைதானத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

''பல சாதனையாளர்கள் உருவாகக் காரணமாக அமைந்தது ரயில்வே துறையின் விளையாட்டுக் கட்டமைப்பு மைதானங்களே. அவற்றை வணிகப் பயன்பாட்டுக்காகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் சாதனை படைக்கும் வீரர்கள் தயாராவது பாதிக்கப்படும். அவை வெறும் மைதானங்கள் அல்ல. நமது தேசத்தின் பெருமையைப் பறைச்சாற்றும் ஒன்று'' என ரயில்வே அமைச்சருக்கு வலியுறுத்தி மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதம் குறித்து சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“இந்திய ரயில்வேக்குச் சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை "ரயில் நிலம் மேம்பாட்டு ஆணையத்தின்" வசம் வணிகப் பயன்பாட்டு நோக்கத்திற்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் தனியாருக்கு விற்பதுதான். இப்பட்டியலில் சென்னை ஐ.சி.எஃப் விளையாட்டு வளாகமும் உண்டு.

ரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர்நோக்கியுள்ள சூழலில் விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பது தேச விரோதம் ஆனது. ரயில்வே வாரியத்தின் 18.05.2021 கடிதம் இந்த அபாயத்தை அமலுக்குக் கொண்டுவர முனைந்துள்ளது.

இந்திய ரயில்வே ஒரு விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தைக் கொண்டுள்ளது. இது சர்வதேச விளையாட்டு வீரர்களில் 50%ஐயும், பதக்க வீரர்களில் 1/3 பங்கையும் கொண்டிருக்கும் தனிப் பெரும் விளையாட்டு அமைப்பாகும். இந்த வீரர்கள் எல்லாம் கீழ்மட்டப் பணிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களே.

இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி பயணச்சீட்டு பரிசோதகர் ஆவார். 'தங்கக் கால்களுக்கு' சொந்தக்காரரான பி.டி.உஷாவும் பயணச்சீட்டு பரிசோதகர் ஆவார். இவர்கள் எல்லாம் ரயில்வே மைதானங்களில் உள்ள ஆதார வளங்கள், வசதிகளைப் பயன்படுத்தியே இந்த உயரங்களை எட்டியுள்ளார்கள். இந்தியா இதுவரை வென்றுள்ள 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13 ரயில்வே ஊழியர்கள் பெற்றுத் தந்தவை. அதுபோல அர்ஜுனா விருது பெற்றவர்களில் பலர் ரயில்வே ஊழியர்கள்.

#சுசில்குமார் - மல்யுத்தம்

#பாஸ்கரன்- ஹாக்கி

#பி.டி.உஷா - தடகளம்

#வெள்ளைசாமி- பளு தூக்குதல்

#ராஜரத்தினம் - கபடி

#ஜெகன்நாதன்- மேசைப் பந்து

#தமிழ்ச் செல்வன் - உடற்கட்டு

இவர்கள் எல்லோருமே விளையாட்டுக்கான ஆதார வளங்கள் கட்டணம் இன்றி ரயில்வே மைதானங்களில் சாமானிய மக்களுக்கும் கிடைத்ததாலேயே முன்னேறி வந்தவர்கள். இல்லையெனில் இவர்களுக்கு இந்த வளங்கள் எங்கே கிடைத்திருக்கும்? என்பது கேள்விக்குறி.

சமூகத்தில் அடித்தள ஆற்றல்களை அடையாளம் காணவும், பயன்படுத்தவும், வளர்க்கவும் இதுபோன்ற அரசுக் கட்டமைப்புகள் தேவை. அப்போதுதான் உலக அளவிலும், தேசிய அளவிலும் கொண்டாடத்தக்க பலர் கிடைப்பார்கள்.

இது வெறும் பணம் பண்ணுகிற செயல் அல்ல. தேசத்தின் பெருமையைப் பறை சாற்றுகிற ஆற்றல் மிக்க அடித்தள வீரர்களுக்கு வழி அடைக்கிற அபாய முடிவாகும். விளையாட்டுத் துறையின் விரிவான ஈர்ப்பை சிதைக்கிற செயல் ஆகும்.

ஆகவே இத்தகைய தவறான முடிவை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும்”.

இவ்வாறு ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x