

கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டியில் காந்தி உலக மையம் சார்பில், மரம் நடும் விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு பங்கேற்று, மரம் நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.
கரோனா வைரஸ் பரவல் மூலம் ஆக்சிஜனின் அவசியம் குறித்து நம்மை உணர வைத்துள்ளது இயற்கை. அத்தகைய ஆக்சிஜனை அளிக்கக் கூடிய மரங்களை ஆக்சிஜன் தொழிற்சாலையாக இனிவரும் சமுதாயம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காந்தி உலக மையம் (காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன்) சார்பில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், வட்டாட்சியர் மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, செய்தியாளரிடம் நடிகர் தாமு தெரிவித்ததாவது:
”ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த இயற்கை ஆக்சிஜனின் தேவை அவசியம். இயற்கை ஆக்சிஜனை அதிகரிக்க வன விரிவாக்கம் அவசியம். ஆகவே, நம் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஒரு மரக்கன்றைத் தன் வாழ்நாளில் நடவேண்டும்.
தமிழகத்தில் தற்போதைய சூழலில், மாணவர்களின் திறனை அறிந்துகொள்ளத் தேர்வு நடத்துவதை விட, உடலின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதற்கான கல்வி அவசியம்''.
இவ்வாறு தாமு தெரிவித்தார்.
புதுகும்மிடிப்பூண்டி பகுதிகளில் காலை முதல், மாலை வரை நீடித்த மரம் நடும் பணியில் சுமார் 180 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதுமட்டுமல்லாமல், காந்தி உலக மையம் சார்பில், சென்னை, திருவண்ணாமலை, தேனி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் தலா 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.