

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் விழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வீதிஉலா நடந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருஆபரண அலங்காரம்
நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. 6 மணிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. 10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே திருஆபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜ மூர்த்தியும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதை தொடர்ந்து மாலை 2 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலாவும், மாலை 4.30 மணிக்கு மேளதாளம் முழங்கிட நடராஜரும், சிவகாமி அம்பாளும் நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சி (ஆருத்ரா தரிசன விழா) அளித்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் குவிந்திருந்தனர். மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்
ஜயப்பா சேவா சங்கம், விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், ஜெயின் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கடலூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் தலைமையில் 600-க் கும் மேற்பட்ட போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். இன்று (27-ம் தேதி) இரவு முத்துபல்லக்கு நடைபெறுகிறது.