Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

ஜெயலலிதா வைத்திருந்ததுபோல மீண்டும் கட்சியை கொண்டு வருவோம்; அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசும் சசிகலா உறுதி: கட்சி சிறப்பாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

‘ஜெயலலிதா அதிமுகவை எப்படி வைத்திருந்தாரோ, அதேபோல மீண்டும் கொண்டு வருவாம்’ என்றுமுன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் சசிகலா பேசியுள்ள நிலையில், சசிகலா இல்லாமல் அதிமுகசிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்ததும்தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகக் கூறினார். அதன்பின் கடந்த மார்ச் 3-ம் தேதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த மே 29-ம்தேதி திடீரென தொண்டர் ஒருவரைதொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலா, ‘‘கரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். கண்டிப்பாக கட்சியை சரி செய்துவிடுவேன்’’ என்று பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தொடர்ந்து கட்சியினர் பலருடன் சசிகலா பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் பேசினார். தொடர்ந்து, 1991-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தனிடம் நேற்று பேசினார்.

அப்போது அவர், ‘‘ நான் நிச்சயம் வருவேன்.கவலைப்படாதீர்கள். நீங்கள் பழைய ஆட்கள். நான் எல்லோரிடமும் பேச ஆரம்பித்துவிட்டேன். கட்சி நம் கண்ணெதிரிலேயே இப்படி ஆகும்போது வருத்தமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள். கட்சியை நன்றாக கொண்டு வரலாம். ஜெயலலிதா எப்படி கட்சியை வைத்திருந்தார்களோ அதேபோன்று கொண்டு வரலாம்’’ என்றார்.

அதேபோல, சசிகலாவிடம் சென்னை மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தேவி பாண்டியன் பேசும்போது, ‘‘கட்சியை இணைப்பது குறித்து ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா? உங்கள் ரூபத்தில் ஜெயலலிதாவை பார்க்க ஆசைப்படுகிறோம். அவர் மாதிரியான ஆளுமை கட்சிக்கு வேண்டும். உண்மையான தொண்டர்களை தற்போது விரட்டிவிட்டனர். அதிமுக தோல்விக்கு காரணமே கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுதான். என்றைக்கு பழனிசாமி எனது தலைமையிலான அரசுஎன்று கூறினாரோ அன்றுடனே முடிந்துவிட்டது. மாவட்ட செயலாளர்கள் உண்மையாக உழைப்பவர்களை தள்ளிவைத்துள்ளனர். சினிமா நடிகைகள், உலக அழகிகளைத் தான் நிர்வாகிகளாக வைத்துள்ளனர். கொடிபிடித்த பெண்களை ஒதுக்கி வைத்துள்ளனர்’’ என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

அதற்கு பதிலளித்த சசிகலா, ‘‘எனக்கு வரும் கடிதங்களை பார்க்கும்போது மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். அனைவரது கஷ்டமும் தெரிகிறது. தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கட்சியை மேன்மேலும் வளர்த்தோம். அதை பார்த்த நான் இந்த சூழலை பார்க்கும்போது மிகவும் மனது வருத்தமாகிறது. கவலைப்படாதீர்கள். நிச்சயம் சரி செய்யலாம். எல்லாவற்றையும் சரி செய்துவிடுவேன். தொண்டர்கள் என்கூட இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது. தைரியமாக இருங்கள்’’ என்றார்.

இந்நிலையில் நேற்று காலை சென்னை டிஜிபி அலுவலகம் அருகில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், சசிகலா தொண்டர்களுடன் பேசுவது குறித்தும், அவர் பொதுச் செயலாளராகஇருக்கிறாரா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:

எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, முதல்வராக இருந்தபோது டெல்லியில் செய்தியாளர்களிடம் சசிகலாவை கட்சியில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று தெரிவித்துவிட்டார். துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் சசிகலா கட்சியில் தற்போதுஇல்லை என்றும், அவர் பேசியதும் அதிமுக கட்சியினரிடம் இல்லை என்றும் கூறிவிட்டார். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சமீபத்தில் வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி,’ சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறிவிட்டார்.

அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலை எப்போதும் தொடரும். அதிமுக பெயரும், இரட்டை இலை சின்னமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான கட்சிக்குத்தான் என்றுஉச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. எங்களுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். அந்த பதவி அப்படியேதான் உள்ளது. பொதுச்செயலாளர் தேர்வு இல்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x