Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

25 மாவட்டங்களில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது; ஊரடங்கு பெரிய அளவிலான வெற்றி: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கப்படும் உணவு, சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தயாரிக்கப்படுகிறது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கு பெரிய அளவிலான வெற்றியை கொடுத்துள்ளது. 25 மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 3 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 8-வது மாடியில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு பெரிய அளவிலான வெற்றியைத் தந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது சரிபாதியாக குறைந்துள்ளது. 42 ஆயிரம் எண்ணிக்கையில் படுக்கைகளும் காலியாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கரோனா மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளது. 4 மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. மிக விரைவில் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டால், அவருக்கு 14 நாட்கள் மருந்தளிக்க வேண்டும். ஒருவருக்கு 14 முதல் 15 குப்பிகள் மருந்து தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 35 ஆயிரம் மருந்து குப்பிகள் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதில் இதுவரை 3,060 மருந்து குப்பிகள்தான் வந்துள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு, அவர் வேறு ஒரு காரணத்தால் உயிரிழந்துள்ளார் என இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது எனவும், இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது எனவும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அது உண்மையல்ல.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும்போதுதான் பலரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் அவர்களது நுரையீரல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அந்த நோயாளிக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்படுகிறது. ஆனால் நுரையீரல் பாதிப்பால் அவர் உயிரிழந்து விடுகிறார். அவர் இறந்தவுடன், மருத்துவர்கள் ஐசிஎம்ஆர். வழிகாட்டுதல்படி, இறப்பு சான்றிதழ் அளிக்கின்றனர். இது முதல்வராக இருந்து, தற்போது எதிர்கட்சி தலைவராக இருப்பவருக்கு தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அவர் உயிரிழக்கும்போது, அவருக்கு தொற்று இல்லை. இதேபோல்தான் எச்.வசந்தகுமாரின் இறப்பும் நிகழ்ந்தது. எனவே எதிர்கட்சி தலைவர் வீணாக பழி சுமத்துவதை நிறுத்தவேண்டும். தங்களது ஆட்சியின்போது என்ன அணுகுமுறைகளை, நடைமுறைகளை மேற்கொண்டீர்களோ, அதைத்தான் இந்த அரசும் செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x