முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுமா?- அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுமா?- அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
Updated on
1 min read

தமிழகத்தில் வரும் 14-ம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தினசரி 35 ஆயிரத்தை தாண்டியதைத் தொடர்ந்து, கடந்த மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கரோனா தொற்று பரவும் வேகம் குறைந்தது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

நேற்றைய நிலவரப்படி, கரோனா தொற்று தினசரி பதிவானது 17,321 ஆக குறைந்துள்ளது. இந்த சூழலில், அரசு அலுவலகங்கள் இயக்கத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதைத்தொடர்ந்து தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தும் கருத்தில் கொள்ளப்படும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in