

கரோனா தடுப்பூசிகளுக்கு செங்கை மாவட்டம் முழுவதும் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. இதனால் மக்கள் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது தொற்று குறைந்து வந்தாலும் இறப்பு விகிதம் குறையவில்லை. தினமும் 25 பேருக்கு மேல் உயிரிழக்கின்றனர். முகக்கவசம், சமூக இடைவெளியைத் தாண்டி தடுப்பூசி ஒன்றே தீர்வு என மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதனால், தடுப்பூசி போட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தேடி மக்கள் வருகின்றனர். ஆனால், தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். கடந்த 2 நாட்களாக இதேநிலை நீடிப்பதால் செங்கையில் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆசிரியர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி போட்டு அதற்கான சான்றிதழை பெற வேண்டும் என்பதால் பரிதவிக்கின்றனர். அதேபோல் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும்; இல்லை எனில் வேலைக்கு வரக்கூடாது என நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதால் தொழிலாளர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, ``தற்போது இங்கு போதிய இருப்பு இல்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுகிறோம். விரைவில் போதுமான தடுப்பூசி வந்தவுடன் 18 - 44 வயதினருக்கும் செலுத்தப்படும்'' என்றனர்.