

கரோனா போல் ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் மற்றவர்களுக்கு பரவாது. கட்டுப் பாடில்லாத நீரிழிவு நோயாளிகள் மட்டுமே கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) நோய்க்கு இந்தியாவில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலர் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோய், 90 சதவீதம் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கே வந்துள்ளது. அதனால், கரோனா நோயாளி களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது. ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதில் சில நூறு பேருக்கு மட்டும் இந்த நோய் வருகிறது. அதனால் பதற்றம் அடையத் தேவையில்லை.
கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு அதிகம் வருவதற்கு, அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதே காரணமாகும்.
அதிலும் கரோனாவிலிருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகளுக்கே மியூகோர் மைகோசிஸ் நோய் அதிக அளவில் வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து மது ரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத் துவ கல்வித் துறை தலைமை மருத்துவர் வெங்கடேஷ் பிரஜனா கூறியதாவது:
முதலில் மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை மூலம் பரவக்கூடிய இந்த நோய் கருப்பு பூஞ்சை நோயே கிடையாது. கருப்பு பூஞ்சை என்பது மற்றொரு குடும்பம். அதற்கும், இந்த நோய்க்கும் சம்பந்தம் இல்லை. அதனால், இந்த நோயை கருப்பு பூஞ்சை என்று அழைப்பதே தவறு. இந்த நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகள் கருப்பு நிறத்தில் மாறுவதால் கருப்பு பூஞ்சை என்கின்றனர்.
இந்த நோய் பழங்காலம் முதலே இருக்கும் நோய். கரோனா போல் ஒரு வரிடம் இருந்து மற்றவர்களுக்கு இந்த நோய் உறுதியாக பரவாது. மியூகோர் மைகோசிஸ் பூஞ்சை நாம் சுவாசிக்கிற காற்றில் உள்ளது. ஆனால், நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இந்த மியூ கோர்மைகோசிஸ் பூஞ்சையை எளிதாக அழித்துவிடும். ஆனால், சர்க்கரை நோய் கட்டுப்பாடில்லாமல் சென்று நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது மூக்கு வழியாக கண் களை பாதித்து மூளையை அடைகிறது. இதை ரைனோசெரிபிரலர்பார் மியூக்கோர் என்பார்கள். மற்றொன்று மூக்கு வழியாக நுரையீரல் செல்வதை பல்மனரி மியூகோர் என்று சொல்வார்கள்.
ஒரு பக்கக் கன்னத்தில் உணர்வின்மை மற்றும் அதீத வலி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மின்சாரம் போன்று பாய்கிற வலி. மூக்கடைப்பு, மூக்குவலி, மூக்கு ஒழுகுவது, கண் சிவப்பது, பார்வை இரட்டை இரட்டையாக தெரிவது போன் றவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை கண்ணுக்கு கீழ் உள்ள சைனஸ் கீழ் பரவுகிறது. சைனஸ்க்கு மேல் கண் உள்ளது. சைனஸில் இருக்கும்போது கவனிக்காமல் இருந்தால் சைனஸின் மேல் உள்ள எலும்பை ஊடுருவி கண்ணுக்குச் சென்றுவிடுகிறது. கண்ணை தாண்டினால் மூளைக்குச் சென்றுவிடுகிறது. அப்போது உயிருக்கே ஆபத்தானதாகி விடுகிறது.
ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பது மிக எளிது. அறிகுறி தெரிந்தவுடன் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்தால் எண்டோஸ்கோபி மூலம் அரைமணி நேரத்தில் அதன் பாதி ப்பை அறிந்துவிடலாம். சைனஸில் இருக்கிற பூஞ்சையை அகற்றி அதில் லிப்போசோமால் ஆம்போடெரிசின் (lipos omal amphotericin) மருந்து போட்டால் 2 முதல் 3 வாரங்களில் முழுமையாக குணப்படுத்திவிடலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.
கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகள் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத் திருப்போர் இந்த நோயைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.