

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறப்போருக்கான இறப்புச் சான்றை அருகேயுள்ள டீக்கடையில் ரூ.220-க்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் தினமும் 15 முதல் 20-க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். இம்மருத்துவமனையில் சுகாதாரத்துறை மூலம் இணை யத்தில் இறப்புச்சான்று பதிவு செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளர், கணினி ஆப்பரேட்டர் உள்ளனர். அவர்கள் பதிவு செய்தபிறகு ‘ஆன்லைன்’ மூலம் எங்கு வேண்டுமானாலும் இறப்புச்சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், இறப்புச்சான்றை பதிவு செய்யும் அலுவலர்கள் மருத்துவமனை அருகேயுள்ள குறிப்பிட்ட டீக்கடைக்கு போய் இறப்புச்சான்றை வாங்கி வந்து தங்களிடம் காட்டும்படி கூறுகின்றனர்.
அந்த டீக்கடையில் இறப்புச்சான்றை பதிவிறக்கம் செய்து கொடுக்க, ஒரு சான்றுக்கு ரூ.220 வரை கட்டாயப்படுத்தி வசூல் செய்கின்றனர். கரோனா காலத்தில் வறுமையில் வாடுவோரது உறவினர்களின் இறப்புச் சான்றுகளை டீக்கடையில் பகிரங்கமாக விற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மானாமதுரையைச் சேர்ந்த வடிவேலு என்பவர் கூறியதாவது: எனது தாயார் சில நாட்களுக்கு முன்பு இறந்தார். ஆதார், குடும்ப அட்டை கொடுத்து இறப்பை பதிவு செய்தேன். அப்போதே அங்கிருந்த ஊழியர், டீக்கடையில் இறப்புச்சான்றை வாங்கிவந்து தன்னிடம் காட்டிவிட்டு செல்லுமாறு கண்டிப்புடன் கூறினார்.
அவர் சொன்ன கடையில் இறப்புச் சான்றைக் கேட்டபோது, ரூ.220 கொடுத்தால்தான் தருவோம் என்று கூறிவிட்டனர். ஆனால், நான் கேட்காமலேயே லேமினேசன் செய்து கொடுத்தனர். அப்படியே லேமினேசன் செய்தாலும் ரூ.20 தான் செலவாகும். மேலும் சான்று பதிவிறக்கம் செய்ய கூடுதலாக ரூ.30 வாங்கலாம். ஆனால் ரூ.220 வாங்குகின்றனர்,’’ என்றார்.
இதுகுறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, இறப்புச் சான்றை எங்கு வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம். டீக்கடையில் தான் வாங்க வேண்டும் என்று யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள் என்றனர்.