

பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை சிப்காட்டில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் பர்னிச்சர் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் அமைய உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பர்னிச்சர்களுக்கு சீனா, இந்தோ னேசியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ரூ. 5000 கோடி மதிப்பிலான பர்னிச்சர் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட துறைமுகங்கள் வாயிலாக இவை பெறப்பட்டு, பெரிய மற்றும் சிறிய பர்னிச்சர் தயாரிப்பு தொழிற்கூடங்களில் தேவையான உபகரணங்களை பொருத்தி முழு வடிவம் கொடுத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக் குமதி செய்வதைத் தவிர்த்து, பர்னிச்சர் உபகரணங்களை இந்தியாவிலேயே ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 100 கோடி முதலீட்டில் தமிழ்நாடு பர்னிச்சர் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது. மாநில அரசு 25 சதவீத மானியம் வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதம் தொழில் முதலீடு செய்வோர் வழங்க வேண்டும். இதற்காக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலுள்ள சிப்காட் வளாகத்தில் 18 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பர்னிச்சர் உற் பத்தியாளர்கள் மற்றும் விற் பனையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மகேந்திரன் மற்றும் தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க மாநில துணைத்தலைவர் கே. மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது:
நிலக்கோட்டை சிப்காட்டில் பர்னிச்சர் உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்கூடம் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் ரூ.100 கோடியில் அமையவுள்ளது. இதன்மூலம் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும். மேலும் தொழிற்கூடத்தில் பயிற்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பர்னிச்சர் தொழில்முனைவோருக்கு கற்றுத் தரப்பட உள்ளது. இந்த தொழிற்கூடம் தொடங்குவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உபகர ணங்கள் நிறுத்தப்படும். இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5000 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி மிச்சப்படும். குறைந்த விலையில் தரமான உபகரண பொருட்கள் சிறு மற்றும் குறு தொழில் செய்து வருபவர்களுக்கு கிடைக்கும். வருங்காலத்தில் உற்பத்தியை அதிகரித்து, வெளி நாடுகளுக்கு பர்னிச்சர்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது என்றனர்.